திருடிப் பட்டம் சூட்டப்பட்ட விதவை, குழந்தையுடன் தீக்குளிப்பு
தர்மபுரி:
திருட்டுப் பட்டம் கட்டி விதவைப் பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததால், அந்தப்பெண் தனது 2 வயது கைக் குழந்தையுடன் தீக்குளித்தார். தற்போது ஆபத்தான நிலையில் அநத்ப் பிஞ்சுக்குழந்தையும் தாயும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியான சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.
தர்மபுரி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அக்பர் பாட்சா. இவர் போலீஸ்காரர். இவரது வீட்டில் விஜயலட்சுமி என்றவிதவைப் பெண் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் அக்பர் பாட்சாவின் வீட்டில் நகைகள் திருடுபோய் விட்டன.
விஜயலட்சுமி தான் நகைகளை எடுத்திருப்பார் என்று அக்பர் பாட்சாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள ஒரு அறையில் அவரை அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
நகை இருக்குமிடத்தைக் கூறி விடுமாறு சொல்லி உடலில் சூடு போட்டும், மிளகாய்ப் பொடியை தூவியும் அவர்சித்திரவதை செய்யப்பட்டார்.
நகைகளைத் நான் எடுக்கவில்லை விஜயலட்சுமி காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.
கடும் சித்திரவதைக்குப் பின் வெளியே விடப்பட்டார் விஜய்லட்சுமி.
இதனால் மனம் நொந்த விஜயலட்சுமி, தனது 2 வயது பெண் குழந்தையுடன் நேற்று உடலில் மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள், விஜயலட்சுமியையும், அவரது குழந்தையையும் தர்மபுரி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
விஜய்லட்சுமி தீக்குளித்ததை அறிந்தவுடன் போலீஸ்காரர் அக்பர் பாட்சாவின் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


