கந்து வட்டிக் கொடுமையால் அதிமுக கவுன்சிலர் தற்கொலை
தேனி:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் சக்திவேல், கந்து வட்டிக்காரர்களின் கொடுமைகாரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
போடிநாயக்கனூர் நகராட்சியின் 30-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சக்திவேல். இவர் வியாபாரம் செய்துவந்தார்.
இதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அவர்கள் கொடுத்த பணத்தை கந்து வட்டி முறையில் வசூலித்துவந்தனர்.
ஒரு கட்டத்தில் சக்திவேலினால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை. வட்டியையும் கட்ட முடியவில்லை.
இதனால் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் சக்திவேலை நெருக்க ஆரம்பித்தார்கள். இதனால் விரக்தியுற்றசக்திவேல், போடி நாயக்கனூர் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், கரிக்கடை பாண்டி மற்றும் புதுக்கல் பாண்டி ஆகிய இருவடம் கடன் வாங்கியிருந்ததாகவும், ஆனால் கந்துவட்டி வசூலிப்பதால் தன்னால் பணத்தைக் கட்ட முடியவில்லை என்றும் நடவடிக்கை எடுக்குமாறும் அதில்கூறியிருந்தார்.
புகார் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த சக்திவேல், பூச்சி மருந்தைக் குடித்து விட்டார். ஆபத்தான நிலையில்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதற்கிடையே, போலீஸார் தன்னைத் தேடுவதாக அறிய வந்த புதுக்கல் பாண்டியும் விஷம் குடித்து விட்டார்.
இருப்பினும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.அங்கு அவர் காப்பாற்றப்பட்டார்.


