முதல்வரானார் முலாயம்: பொடா வழக்குகள் ரத்து
லக்னெள:
உத்தரப் பிரதேச முதல்வராக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கோமதி ஆற்றின் கரையில்லட்சுமண் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகரும் முலாயமின் நண்பருமான அமிதாப் பச்சன், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,முன்னாள் பிரதமர் சந்திர சேகர், ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி, பா.ஜ.க. தலைவர் கல்ராஜ் மிஸ்ராஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற கையோடு மாநிலத்தில் கடந்த மாயாவதி ஆட்சியில் அரசியல் கட்சியினர் மற்றும் பிறர் மீதுபோடப்பட்ட அனைத்து பொடா வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக முலாயம் அறிவித்தார். இந்தச் சட்டத்தைபயன்படுத்தவே போவதில்லை என்றும் அறிவித்தார்.
பா.ஜ.கவுக்கும் முலாயமுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் அவர்முதல்வராவதைத் தடுக்க பா.ஜ.க. முயலவில்லை எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள்முதல்வருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
முலாயம் முதல்வராவதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியையும் மாயாவதி ராஜினாமா நேற்றிரவு ராஜினாமாசெய்துவிட்டார்.
இதற்கிடையே முலாயம் முதல்வரானால், மாயாவதியை வழக்குகளில் சிக்க வைத்து சின்னாபின்னாபடுத்துவார் எனபா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இதனாலேயே முலாயம் முதல்வராவதை பா.ஜ.க. எதிர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தலித்களின் ஓட்டை முலாயம் இழப்பார், யாதவ் மற்றும் பிற்பட்டோரின் ஓட்டுக்களை மாயாவதிஒட்டுமொத்தமாக இழப்பார் என்று பா.ஜ.க. கருதுகிறது. இதையடுத்து கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க தனக்குவசதியாக இருக்கும் என அக் கட்சி நினைக்கிறது.
இந் நிலையில் முலாயமின் ஆட்சியில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்க சோனியா காந்திதலைமையி நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில்சோனியா தனது முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.
முலாயம் ஆட்சியைப் பிடிக்க உதவினாலும் கூட மாயாவதியுடனான உறவை விரோதமாக்கிக் கொள்ள காங்கிரஸ்விரும்பவில்லை. மாயாவதியின் தலித் ஓட்டுக்களை மனதில் வைத்துள்ள காங்கிரஸ் அவருடன் நெருக்கமாகவேஇருக்க விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தன்னை ஆதரிக்கும் காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் தள் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஆட்சியிலும்பங்கேற்க வேண்டும் என முலாயம் விரும்புகிறார்.


