மசூதி இடிப்பு: தப்பினார் அத்வானி- சிக்கிய ஜோஷி ராஜினாமா
டெல்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் துணைப் பிரதமர் அத்வானியை விடுவித்து ராய்பரேலி சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மீது குற்றச் சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தனது பதவியை முரளி மனோகர் ஜோஷி ராஜினாமா செய்தார்.
பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்களைத் தூண்டியதாக அத்வானி, ஜோஷி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் இன்றுமுக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.கே. சிங், இந்த வழக்கில் இருந்து அத்வானியைவிடுவிப்பதாக இன்று அறிவித்தார். மேலும் அவர் மீதான குற்றப் பத்திரிக்கையையும் ரத்து செய்தார்.
அதே நேரத்தில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியின் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஜோஷி தவிர பா.ஜ.க. தலைவர்களான வினய் கத்யார், உமா பாரதி, விஸ்வ இந்துபரிஷத் தலைவர்களான அசோக் சிங்கல், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பரா ஆகியோர்மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இவர்கள் அனைவரும் வரும் அக்டோபர் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.
ராய்பரேலி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் மிருதுல் ராகேஷ் தெரிவித்தார்.
என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால் பதவி விலகிவிடுவேன் என ஜோஷி ஏற்கனவேஅறிவித்திருந்தார்.
ஆனால், அத்வானி அது போன்ற அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால், குறறச்சாட்டுகள் பதிவானால்,அவரும் பதவி விலக வேண்டிய கடும் நிர்பந்தம் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து இன்று அத்வானியின் இல்லத்தில் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு, பொதுச் செயலாளர்பிரமோத் மகாஜன், சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர். பிரதமர் வாஜ்பாய்இப்போது துருக்கி- அமெரிக்கப் பயணத்தில் உள்ளதால் அவருடன் நாயுடு தொலைபேசியில் பேசினார்.
ஆனால், அத்வானி விடுவிக்கப்பட்டுவிட்டார். அதே நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஜோஷி, தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தனது பதவியை ராஜினாமாசெய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.
ராஜினாமாவுக்கு முன் அத்வானி மற்றும் வெங்கைய்யா நாயுடுவுடனும் அவர் தொலைபேசியில் பேசினார்.அப்போது அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என அத்வானி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே அத்வானி மீதான குற்றங்களை சிபிஐ முறையாக நீதிமன்றத்தில் எடுத்து வைக்கவில்லை என்றும்,இதனால் தான் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


