குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின்போது பெண் சாவு
மதுரை:
மதுரை அருகே குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையின்போது பெண் பரிதாபமாக பலியானார்.
மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை நடந்தது. இவர்களில் செல்வி என்பவருக்கு, அறுவைச் சிகிச்சையின்போது ரத்தம்அதிக அளவில் வெளியேறியது.
இதையடுத்து அவரை மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்வியை பரிசோதித்தடாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அதிர்ந்து போன செல்வியின் உறவினர்கள், மேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம்நடத்தினர். உடலை வாங்க மறுத்து சாலை மறியலிலும் இறங்கினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலூர் காவல் துறை டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். மேலூர்எம்.எல்.ஏ. சாமியும் அங்கு வந்து செல்வியின் உறவினர்களை சமாதானப்படுத்தினார்.
உரிய இழப்பீட்டுத் தொகை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார். இதன் பின்னரே கூட்டம் கலைந்தது.
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்த செல்வி கர்ப்பிணியாக இருந்தார் என்றுகூறப்படுகிறது. கர்ப்பிணிக்கு எப்படி இந்த அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முன் வந்தனர் என்றுதெரியவில்லை.

