• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எனக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை ஜாஸ்தி: ராமதாஸ்

By Staff
|

சென்னை:

நான் மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவன் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சட்டமன்றத்தில் ஜனநாயகம் கொல்லப்படுவதாகக் கூறி திமுக கூட்டணி சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

நான் அப்போதே சொன்னேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் சட்டசபைக்கு போவது வீண் வேலை, நம் நேரம் தான் வீணாகும், பேசாமல் சட்டசபைக்கு வெளியிலேயே சட்டமன்றம் மாதிரி கூடி பேசுவோம் என்றேன். ஆனால், அதை கருணாநிதி ஏற்கவில்லை.

இப்போது சட்டசபையை புறக்கணித்திருக்கிறோம். இன்று மீண்டும் போகப் போகிறோம். போனாலும் வெளியேற்றுவார்கள். பேசாமல் தொகுதிப் பக்கம் போய் தேர்தல் வேலையை பார்க்கலாம்.

சட்டசபையில் 2 விதமான அர்ச்சனைகள் தான் நடக்கின்றன. ஒன்று ஜெயலலிதாவை துதி பாடும் அர்ச்சனை, இன்னொன்று எதிர்க் கட்சியினரை தூற்றும் அர்ச்சனை.

ஆயிரத்தின் ஒருவன் (எம்ஜிஆர்) கண்டெடுத்த ஒளிவிளக்கே என்று சினிமா பெயர்களிலேயே ஜெயலலிதாவைப் பாராட்டி அமைச்சர்கள் பேசுகிறார்கள். அங்கு மக்கள் பிரச்சனைகள் குறித்தா பேசுகிறார்கள்.

அதிமுகவுடனும் பாஜகவுடனும் இனிமேல் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். இதை பத்திரப் பதிவு ஆபிஸில் பதிவு செய்துத் தரவும் தயார் என்று நான் கூறிய பின்னரும் சில பத்திரிக்கைகள் இன்னும் பாமக குறித்து கிசுகிசு வெளியுட்டு வருகிறார்கள். யார் அதிக சீட் கொடுக்கிறார்களோ அவர்கள் பின்னால் போய்விடுவேன் என்று என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.

மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகமாக உள்ளவன் இந்த ராமதாஸ். போனமுறை ஜெயலலிதா பக்கம் போனது சீட்டுக்காக அல்ல. அதை கலைஞரிடமே சொல்லியிருக்கிறேன். ஆனால், போனதும் முதல் ஆளாக ஓடி வந்தவன் நான் தான். இனிமேல் அதிமுகவுடன் கூட்டணியே வைக்க மாட்டேன்.

அதிமுகவை நான் ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை. அது ஒரு கொள்ளைக் கூட்டம். 22 ஆண்டுகள் நாட்டை நாசப்படுத்திய கும்பல் அது.

ஜெயலலிதாவின் ஆட்சியை கடந்த மே மாதமே கலைத்திருக்கலாம். இப்போது நல்லாட்சியாவது நடந்திருக்கும்.

இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் நிருபர்களே.. ஒன்றைச் சொல்கிறேன். உங்கள் டைரிகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். அதிமுக அடிச்சுவடே இல்லாமல் போகும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது. அறிஞர் அண்ணா 40 கி.மீக்கு ஒரு கல்லூரி அமைக்க உத்தரவிட்டு, அமைத்தும் காட்டினார். அடுத்து வந்த அதிமுக சனியன் ஆட்சியில், 22 வருடத்தில் ஒரு அரசுக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை.

அதே நேரத்தில் 160 தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கல்வியை கூறு போட்டு விற்றவர்கள் அதிமுகவினர். ஏழைக்குக் கல்வி இல்லாத நிலையை ஏற்படுத்தியவர்கள்.

5வது முறையாக முதல்வராகப் போகும் கருணாநிதியை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அய்யா, உங்களால் நிச்சயம் முடியும். புரையோடிப் போன கல்விக் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள். ஏழைக்கும் உயர் கல்வி கிடைக்க வழி செய்யுங்கள் என்றார் ராமதாஸ்.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் பேசுகையில்,

நல்ல வேளை நான் இப்போது எம்எல்ஏவாக இல்லை. சட்டமன்றத்தின் தரம் அவ்வளவு தூரம் தாழ்ந்து போயிருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். இந்த அம்மையாருக்கு 100 தோல்வி வந்தாலும் அவரது வாய்க்கொழுப்பு மட்டும் அடங்கவே இல்லை என்றார்.

வரதராஜன் பேச்சு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் பேசுகையில்,

தமிழகத்தின் வனப் பகுதிகள் எல்லாம் அதிமுகவினரால் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு மரக் கிளையை ஒடித்ததற்காக 110வது விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

வளர்மதி என்ற கெடுமதி, கருணாநிதியை சாதியைச் சொல்லி அவமதிக்கிறார். மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஹேமச்சந்திரன் மூளை பற்றி ஜெயலலிதா பேசுகிறார். உங்கள் மூளை தான் கிரிமினல் மூளையாச்சே? என்றார்.

மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஹேமச்சந்திரன் பேசுகையில்,

எங்கள் அறிவுரை தேவையில்லை. பேசக் கூடாது என்கிறார் ஜெயலலிதா. உங்களுக்கு அறிவுரை கூறத்தான் மக்கள் எங்களை சட்டசபைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாங்கள் பேசத் தான் செய்வோம். நீங்கள் எங்களை தூக்கி வெளியில போட்டால், உங்களைத் தூக்கி மக்கள் வெளியில் போடுவார்கள் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X