For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் சொன்னதெல்லாம் உண்மை: ரவி சுப்பிரமணியம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸுக்கு பயந்து நான் பொய் சாட்சி கூறவில்லை. ஜெயேந்திரர் பற்றி நான் கூறியது அத்தனையும்உண்மை என்று குறுக்கு விசாரணையின் போது ரவி சுப்பிரமணியம் கூறினார்.

காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்திடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

சாட்சிக் கூண்டில் ரவி சுப்பிரமணியம் நிற்க அவரிடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன், விஜயேந்திரர் சார்பில் லட்சுமணரெட்டியார், சுந்தரேச அய்யர் சார்பில் வரதராஜன், அப்பு, கதிரவன் சார்பில் சந்திரசேகரன் ஆகிய வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணைசெய்தனர். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பாலசுந்தரம், தியாகராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அதன் முழு விவரம்:

ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன்: நான் சில கேள்விகளைக் கேட்பேன். அதற்கு சரி அல்லது தவறு என்று பதில் கூறினால்போதும்.

ரவிசுப்ரமணியம் (ஆர்.எஸ்.): கொஞ்சம் சப்தமாக எனது காதில் விழும்படி கேள்வி கேளுங்கள்.

தினகரன்: லீலா என்ற பெண்ணுடன் இரட்டை அர்த்தத்துடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசியதாகவும், உங்களுடைய நண்பர்விஸ்வநாதனின் மனைவி சரஸ்வதியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பின்னர் அவடம் மன்னிப்பு கேட்டார் என்றும் அரசுத் தரப்பில்தாக்கல் செய்யப்பட்ட முதல் விசாரணையின்போது கூறியுள்ளீர்கள். இது பொய் தானே?

ஆர்.எஸ்.: இல்லை, நான் கூறிய அனைத்துமே உண்மை.

தினகரன்: பிரேமா என்பவர், ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் ஒரு பெண், பத்மா, ரேவதி ஆகியோருடன் ஜெயேந்திரர்தனியாக இருந்ததாகும், அதை நீங்கள் பார்த்ததாகவும் கூறியது அனைத்தும் கலப்படமற்ற பொய் தானே?

ஆர்.எஸ்.: இல்லை, உண்மை.

தினகரன்: சங்கரராமனிடமிருந்து இனி கடிதம் வரவேக் கூடாது. ரூ. 50லட்சம் செலவானாலும் பரவாயில்லை, அவனைத் தீர்த்துக்கட்டுங்கள் என்று ஜெயேந்திரர் கூறியதாக நீங்கள் கொடுத்த வாக்குமூலம் அப்பட்டமான பொய் தானே?

ஆர்.எஸ்.: இல்லை.

தினகரன்: இந்தக் கொலை தொடர்பாக நடந்ததாக கூறப்படும் பணப் பரிமாற்றம் தொடர்பாக நீங்கள் கூறிய அனைத்தும் பொய் என்கிறேன்.

ஆர்.எஸ்.: இது தவறு.

தினகரன்: பார்கவ் என்ற புரோக்கர் கொடுத்த ரூ. 20 லட்சம் பணத்தை முன் பணமாக ஜெயேந்திரர் கொடுத்தார் என்றும் அதை கதிரவனிடம்நீங்கள் கொடுத்ததாகவும் கூறியதை பொய் என்கிறேன்.

ஆர்.எஸ்.: இல்லை, அதை கதிரவனிடம் கொடுக்கவில்லை. அப்புவிடம் கொடுத்தேன்.

தினகரன்: இங்கே காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் வந்துள்ளாரா?

ஆர்.எஸ்.: ஆமாம்.

தினகரன்: கடந்த 7ம் தேதி நடந்த விசாரைணயின்போதும் அவர் வந்திருந்தாரா?

ஆர்.எஸ்.: இல்லை, நான் பார்க்கவில்லை.

தினகரன்: அவர் அன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார் என்று நான் கூறினால் அதை நீங்கள் மறுக்க முடியுமா?

ஆர்.எஸ்.: நான் பார்க்கவில்லை என்று மட்டுமே கூற முடியும். நான் வீட்டில் இல்லாதபோது, எனது வீட்டுக்கு எதிர்த் தரப்பு வழக்கறிஞர்சென்றிருக்கிறார்.

இவ்வாறு ரவி சுப்பிரமணியம் கூறியதற்கு ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன்,சாட்சிக் கூண்டுக்கு அருகே நின்று கொண்டு ரவி சுப்பிரமணியத்தை தூண்டி விடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

நீதிபதி உத்தமராஜன்: கோர்ட்டு சும்மா இருக்கவில்லை. நானும் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதை அனுமதிக்க முடியாது.சாட்சிக் கூண்டு அருகே இருக்கும் போலீஸார் அங்கிருந்து உடனே விலகிச் செல்ல வேண்டும். கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கிருந்து அகன்றனர்.

தினகரன்: சங்கரமடம், மடாதிபதிகளை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற சிலரின் நடவடிக்கையின் காரணமாக, கதை வசனம் எழுதப்பட்டுஅதை நீங்கள் இங்கு வாசித்திருக்கிறீர்கள் என்கிறேன்.

ஆர்.எஸ்.: இல்லை.

தினகரன்: போலீஸார் கூறியதை அப்படியே இங்கே ஒப்பித்திருக்கிறீர்கள். நீங்கள் கூறிய அனைத்துமே பொய் என்கிறேன்.

ஆர்.எஸ்.: அனைத்தும் உண்மை.

அரசு வழக்கறிஞர் தியாகராஜன்: எதிர்த் தரப்பு வக்கீல் தனது வீட்டுக்கு வந்ததாக அப்ரூவர் கூறியிருக்கிறார். அதை நீதிமன்றம் பதிவு செய்யவேண்டும்.

நீதிபதி உத்தமராஜன்: அது தொழில் விவகாரம் தொடர்புடையது. அதை இந்த வழக்கில் பதிவு செய்ய முடியாது.

விஜயேந்திரரின் வழக்கறிஞர் லட்சுமண ரெட்டியார்: இந்த வழக்கில் யாரை எப்படி சேர்ப்பது என்று அறிவுரை தந்து அதை எழுதிக்கொடுத்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்துள்ளார்கள். பின்னர் அதையே ரகசிய வாக்குமூலமாக கொடுக்குமாறு கூறி மாஜிஸ்திரேட்டிடம்அனுப்பியுள்ளார்கள். அப்போது போலீஸின் பாதுகாப்பிலும், மிரட்டலிலும் இருந்தீர்கள். உண்மையா?

ஆர்.எஸ்: இல்லை.

ரெட்டியார்: பிள்ளையார்பட்டிக்குப் போனதாக கூறியுள்ளார்கள். பாவ மன்னிப்புக்காக அங்கு போனீர்களா?

ஆர்.எஸ்.: இல்லை.

ரெட்டியார்: சங்கரராமன் கொலையான பிறகு உங்களது அண்ணன், தம்பி உள்பட உடன் பிறந்தவர்கள யாடம் உங்கள் உறவை வைத்துக்கொள்ளவில்லையா?

ஆர்.எஸ்.: உறவு இல்லை என்று கூற முடியாது. ஆனால் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அவர்களை பார்க்கவோ, பேசவோ இல்லை.

ரெட்டியார்: இந்தக் கொலை பற்றி உங்களது நண்பர்களுடன் பேசினீர்களா?

ஆர்.எஸ்.: நண்பர்களிடம் பேசியுள்ளேன். அப்புவிடம் பேசினேன். ரவி என்ற நண்பரிடம் பேசினேன்.

ரெட்டியார்: கொலை நடந்தபோது எங்கே இருந்தீர்கள், எங்கு சாப்பிட்டீர்கள்?

ஆர்.எஸ்.: விஸ்வநாதன் வீட்டில் இருந்தேன். அவருடைய வீட்டில்தான் சாப்பிட்டேன்.

ரெட்டியார்: கொலை குறித்து அவரிடம் பேசினீர்களா?

ஆர்.எஸ்.: இல்லை.

ரெட்டியார்: பிள்ளையார்பட்டியில் இருந்து வந்த பிறகு கைது செய்யப்படும் வரை எங்கு தங்கியிருந்தீர்கள் என்பதை ரகசியவாக்குமூலத்திலோ அல்லது கோர்ட்டில் முதல் விசாரணையின்போதோ கூறினீர்களா?

ஆர்.எஸ்.: சொல்லவில்லை.

ரெட்டியார்: இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் 2வது கோர்ட்டில் நீங்கள கொடுத்த வாக்குமூலம் பொய்தானே?

ஆர்.எஸ்.: இல்லை.

சுந்தரேச அய்யரின் வழக்கறிஞர் வரதராஜன்: கோர்ட்டில் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தின்படி சாட்சியம் அளிக்காவிட்டால் அல்லதுமுரண்பாடுடன் கூறினால் கொலை மற்றும் பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உங்களையும் போலீஸார் சேர்த்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.எஸ்.: தெரியும்.

வரதராஜன்: இந்த வழக்கு தொடர்பாக சுந்தரேச அய்யரை 6.10.2004 அன்று தானே சந்தித்தீர்கள்?

ஆர்.எஸ்.: இல்லை, 1.9.2004 அன்று சந்தித்தேன்.

வரதராஜன்: 1998 ஆண்டுக்கு முன்பிருந்தே சுந்தரேச அய்யருடன் உங்களுக்கு மனக் கசப்பு இருந்ததா?

ஆர்.எஸ்.: இல்லை.

வரதராஜன்: சங்கரா கலைக் கல்லூயை நீங்கள் சரியாக கட்டவில்லை என்று கூறி உங்களுக்க வர வேண்டிய பணத்தை சுந்தரேச அய்யர்தடுத்து நிறுத்தினார் என்று கூறுவது சரியா?

ஆர்.எஸ்.: இல்லை.

வரதராஜன்: தமிழ்நாடு ஆஸ்பத்தியை கட்டும் சுமார் ரூ. 80 முதல் 100 கோடி வரையிலான காண்டிராக்ட் உங்களுக்குக் கிடைக்காமல்சுந்தரேச அய்யர் தடுத்து விட்டாரா?

ஆர்.எஸ்.: இல்லை.

வரதராஜன்: 1998ம் ஆண்டு திருவான்மியூரில் சங்கரா கல்லூ கட்டுமானத்துக்கு ரூ. 12 கோடிக்கான ஒப்பந்தத்தை உங்களுக்குத் தந்து விட்டுபின்பு அதை ரத்து செய்து விட்டு ராமாராவ் என்பவருக்கு கொடுத்தது உண்மையா?

ஆர்.எஸ்.: அது திருவான்மியூர் அல்ல, திருவொற்றியூர். ராமாராவுக்குக் கொடுத்தது உண்மைதான்.

வரதராஜன்: சுந்தரேச அய்யர் உங்களை ஒழித்துக் கட்டப் பார்த்தாரா?

ஆர்.எஸ்.: ஒழித்துக் கட்டுவதென்றால்..?

வரதராஜன்: ஒப்பந்தங்கள் தொடர்பாக ..

ஆர்.எஸ்.: எனக்குக் கட்டட ஒப்பந்தங்கள் தராமல் அதிலிருந்து என்னை ஒழித்துக் கட்டப் பார்த்தார்.

வரதராஜன்: ரகசிய வாக்குமூலம் அளித்தபோதும், தலைமை மாஜிஸ்திரேட்டு மன்னிப்பு வழங்கியபோதும், நீங்கள் கைது செய்யப்பட்டதேதி பற்றிக் கூறினீர்களா?

ஆர்.எஸ்.: என்னிடம் கேட்கவில்லை, நானும் கூறவில்லை.

வரதராஜன்: இந்த வழக்கு பற்றிய விவரம் தெரியும் எனறு விசாரணையின்போது தலைமை மாஜிஸ்திரேட்டிடம் கூறினீர்களா?

ஆர்.எஸ்.: இல்லை.

வரதராஜன்: 28.12.2004, 29.12.2004 ஆகிய தேதிகளில் போலீஸ் அதிகாரி யாராவது உங்களைத் தொடர்பு கொண்டார்களா?

ஆர்.எஸ்.: அந்தத் தேதிகளில் நான் விசாரணை அதிகாரி சக்திவேலின் விசாரணையின் கீழ் இருந்தேன்.

வரதராஜன்: குருவாயூரில் உங்களைக் கைது செய்ததாக கூறும் காவல்துறையினர், அன்று வழக்கு விவரம் குறித்து கூறினார்களா?

ஆர்.எஸ்.; எனது பெயரைக் கேட்டார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்வதாகக் கூறினார்கள். அப்போது விசாரிக்கவில்லை.

வரதராஜன்: ரூ. 20 லட்சத்தை கதிரவனிடம் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அது கொடுக்கப்பட்ட தேதி, கிழமை, மாதத்தைக் கூற முடியுமா?

ஆர்.எஸ்.: 2004ம் ஆண்டு அக்டோபர் என்று நினைக்கிறேன். தேதி சரியாக நினைவில்லை.

வரதராஜன்: ரூ 20 லட்சம் தொகை, ரூ. 5 லட்சம் ஆகியவை கொலை நடந்து ஒரு மாதத்திற்குள் கொடுக்கப்பட்டதா?

ஆர்.எஸ்.: ஆம்.

வரதராஜன்: எந்த சந்தர்ப்பத்திலும், சுந்தரசே அய்யர், இந்தக் காரணத்துக்காக ரூ. 5 லட்சத்தை கொடுக்கவில்லை என்று கூறுகிறேன். நீங்கள்பொய் சொல்கிறீர்கள்.

ஆர்.எஸ்.: இல்லை, உண்மையைத்தான் கூறியுள்ளேன்.

வரதராஜன்: போலீஸ் அச்சுறுத்தலுக்கு உட்பட்டு பொய் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆர்.எஸ்.: இல்லை.

இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது.

வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் கிடைக்காததால், அப்பு, கதிரவன் சார்பில் குறுக்கு விசாரணையை வழக்கறிஞர்கள் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி உத்தமராஜன், அன்றைய தினம் வழக்கை மேல் கோர்ட்டுக்கு (செஷன்ஸ்அல்லது விரைவு நீதிமன்றம்) மாற்ற உத்தரவிடப்படும். எனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

குறுக்கு விசாரணை நடந்த சுமார் 2 மணி நேரமும் அப்பு, கதிரவன், சுந்தரேச அய்யர் ஆகியோர் இருந்த பக்கம் அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அவரிடம் 69 கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் ரவி சுப்பிரமணியம் சரளமாகவே பதிலளித்தார். ஆனாலும் அவர்முகத்தில் ஒருவித பதற்றம் காணப்பட்டது என்னவோ உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X