செவ்வாய் கிரக பாறைகளுக்கு இந்திய பெயர்கள்!
கொல்கத்தா:
செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்தியப் பெயர்களை சூட்டியுள்ளது.
நாசா நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டமான மார்ஸ்ரோவர் திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த அமிதப கோஷ் என்ற ஆராய்ச்சியாளரும் இடம் பெற்றுள்ளார்.மார்ஸ் ரோவர் திட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் மற்றும் ஒரே ஆசியர் கோஷ் மட்டுமே.
கோஷ் தவிர அமெரிக்க கோளியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் வியாட், வானியல் நிபுணர்கள் டாக்டர் ஜேம்ஸ் ரைஸ், டாக்டர் நக்கோல் ஷூல்ட்ஸ் ஆகியோரும் இந்தத்திட்டத்தில் அடங்கியுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இக் குழுவினர் கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தங்களது ஆராய்ச்சி குறித்து அமிதப கோஷ் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள பல்வேறு பாறைகளுக்கு இந்தியப் பெயர்களை நாசா சூட்டியுள்ளது. இப்பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க நாசா உரிய அனுமதி கொடுத்தவுடன் அந்தப் பெயர்களை வெளியிடுவோம்.
இந்திய வானியல் நிபுணர்கள் மற்றும் மண்ணியல் நிபுணர்களை கலந்து ஆலோசித்த பின்னர் தான் இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் குழுவினர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வது இதுவே முதல் முறை. எங்களது பயணத்தின் நோக்கம்:இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதே.
மார்ஸ் ரோவர் திட்டத்தின் 500 நாள் கால கட்டத்தின்போது, எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், ஏமாற்றங்கள், முக்கிய நிகழ்வுகளை இந்திய சுற்றுப்பயணத்தின்போது பகிர்ந்து கொள்ளவுள்ளோம். மேலும் இதுதொடர்பாக விரிவுரையாற்றவும் உள்ளோம் என்றார் கோஷ்.
இந்தியாவில் செவ்வாய் கிரக ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்கப்படுத்துவதற்காக புதிய இணைய தளம் ஒன்றையும் நாசா ஏற்படுத்தியுள்ளது. அதன் முகவரிwww.tharsisindia.com (தர்சிஸ் என்பது செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப் பெரிய எரிமலைப் பகுதியாகும்)
செவ்வாய் கிரக ஆராய்ச்சி குறித்து இந்த இணையத் தளத்தில் ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் மாணவர்கள், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட பாத் பைன்டர், குளோபல் சர்வேயேர் விண்கலங்களைப் போன்ற மாதிரிகளை செய்து அனுப்பலாம்.மேலும் செவ்வாய் கிரக போதனை குறித்து ஆசிரியர்களுக்குத் தேவையான தகவல்களும் இங்கு ஏராளமாக உள்ளன.












Click it and Unblock the Notifications