• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெவும் நன்றி, விசுவாசமும்: திருநாவுக்கரசர்

By Staff
|

சென்னை:

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம். இதில் தவறில்லை என்று முன்னாள்மத்திய அமைச்சரும், ஜெயலலிதாவின் பரம விரோதியுமான பாஜக எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு போட்டியிட சீட் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பாஜகவுடன்கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. இதையடுத்து திருநாவுக்கரசரை ராஜ்யசபா எம்பியாக்கியது பாஜக.

இந் நிலையில் திருநாவுக்கரசர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

கடந்த 1982ல் செல்வி ஜெயலலிதா அவர்கள், கடலூர் மாநாட்டின் மூலம் கட்சியில் சேர்ந்த போது, நான் தொழில்துறைஅமைச்சராக இருந்தேன். 1977, 1980 இப்படி 2 முறை சட்டசபையில் வெற்றி பெற்றிருந்தேன். இந்த காலம் தான் மக்கள் திலகம்நோய்வாய்ப் பட துவங்கிய காலம். யாருக்கும் தெரியாமல் அவரே சமாளித்துக் கொண்டிருந்தார்.

கடந்த 1981ல் மதுரை உலகத் தமிழ் மாநாட்டில், காவிரி தந்த கலைச் செல்வி நாட்டிய நாடகத்தை செல்வி ஜெயலலிதா நடத்தியபோது, முதல்வர் எம்ஜிஆர் மேடையில் விருது வழங்கிய போது நானும் உடன் இருந்தேன். ஜெயலலிதா வீட்டுக்கு யாரையும்அழைக்காத எம்ஜிஆர் 1982 தொடக்கத்தில் என்னை, நான் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்லும் முன்பு அங்கிருந்து கொண்டுஅழைத்தார்.

ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அறிமுகப்படுத்தியும் வைத்தார். பிறகு அதே ஆண்டில் ஜெயலலிதா கட்சியில்சேர்க்கப்பட்டார். ஜெயலலிதா கொள்கைப்பரப்பு செயலாளராக ஆன பின் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பலர் அவர்களைக்கேட்டு நான் இளைஞர் அணி நிர்வாகிகளை நியமிக்கவில்லை என்று கட்சி அலுவலகத்தில் கூட்டங்களில் புகார் கூறும்போதெல்லாம் அது திருநாவுக்கரசு-எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் நான் தலையிட முடியாது என்று எனக்குசாதகமாகவே பேசிய ஜெயலலிதா எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

ஒருவர் மீது ஒருவருக்கு மதிப்பும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தது. அறந்தாங்கியில் ஜெயலலிதாவை அழைத்துச் சென்று முதல்பெரிய பொதுக்கூட்டம் நடத்தினேன். எம்ஜிஆரின் அனுமதியோடு குதிரை, யானை, மயிலாட்டம், ஒயிலாட்டம், பல நூறுகார்களில் வரவேற்பு இப்படி தடபுடலாக நடந்த கூட்டம். ஜெயலலிதா மகிழ்ந்தார். ஏன் எம்ஜிஆரும் என்னைப் பாராட்டினார்.

இரட்டை இலை பதித்த வெள்ளிக் கேடயம் பரிசளிக்கப்பட்ட போது ஒரு இலையில் எம்ஜிஆர் மற்றோர் இலையில் ஜெயலலிதாபடம் போட்டிருந்தேன். அந்த படம் பத்திரிகைகளில் வெளிவந்த போது, பல அமைச்சர்கள் என் மீது வருத்தப்பட்டனர்.

எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஜானகிஅம்மையாரின் வருத்தத்துக்கும் ஆளானேன். எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்த போது, 1984 பொதுத் தேர்தலில்ஜெயலலிதாவை ஓரங்கட்ட பலரும் விரும்பிய போது நான் இளைஞர் அணி நிர்வாககிகள் கூட்டத்தை கூட்டி, ஜெயலலிதாவைதேர்தல் சுற்றுப்பயணத்துக்கு அனுப்ப வேண்டும் என அறிக்கை தந்தேன்.

இதனால் ஆர்எம்வீ, நாவலர், ஜானகி அம்மையார் அப்போதைய பொதுச் செயலாளர் ப.உ. சண்முகம் இப்படி பலரதுவருத்தத்துக்கு ஆளானேன். கட்சிப் பத்திரிக்கை அண்ணா, தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடுகிறது, எனவே நமக்கு ஒருபத்திரிகை வேண்டும் என்று ஜெயலலிதா சொன்ன போது பொன்மனம் எனும் தினப் பத்திரிகையை தொடங்கினேன். அதுவே ஜெஅணிக்கு அதிகாரப் பூர்வ ஏடாக சில காலம் இருந்தது.

ஜானகி அம்மையார் ஆட்சி நடந்த போது நான் ஜெயலலிதா வீட்டில் என் மூலமாக பாதுகாப்புக்காகப் போட்டிருந்த கராத்தேவீரர்களுக்கும் மன்னார்குடியில் இருந்து (சசிகலா மூலமாக)பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கும் ஜெயலலிதாவீட்டில் அடிதடி நடந்தது. இந்த அடிதடி நிகழ்ச்சி முதல் கோணல் என்பது போல் முற்றிலும் கோணல் என்பது போல் ஜெயலலிதாஎன் மீது தொடர்ந்து சந்தேகப்படத் தொடங்கினார்.

ஜெயலலிதா அரசியலில் பலவீனமாக இருக்கும் போதெல்லாம் என்னை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். அவர் பலமாகஇருப்பதாக கருதும் போது என்னை கட்சியில் இருந்த வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தினர் எனது முதல் நீக்கத்துக்குகாரணமாக இருந்து ஜெயலலிதாவிடம் தவறான செய்திகளை பரப்பினர்.

அடுத்த முறை 1997ல் நான் கட்சியில் தொடர வேண்டும் என சசிகலா விரும்பிய போது, கூட இருந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர்எனக்கு எதிராக சதி வலை பின்னி, அம்மையாருக்கு தவறான தகவல்களை தந்தனர். அவர்கள் பலரும் இன்று ஜெயலலிதாவால்ஒதுக்கி ஓரம்கட்டப்பட்டு பலர் பாவம் காணாமல் போய்விட்டனர்.

மொத்தத்தில் ஜெயலலிதா என்னை நம்பவில்லை. நான் எம்ஜிஆரை மதித்த மாதிரி முழுமையான தலைவராக அவரை ஏற்றுமதிக்கவில்லை என்பது அவரது மனக்குறை. நன்றி, விசுவாசம் இவை ஜெயலலிதா அகராதியில் இல்லாத சொற்கள். வேண்டியவர்என்று எவரும் இல்லை. யாரையும் தேவைக்கு பயன்படுத்துவது, தேவையில்லை என்றால் தூக்கி எறிவது ஒதுக்கிவிடுவதுஅவரது இயல்பு.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும். சந்தேகம் ஜெயலலிதாவின் தொடர் வியாதி.ஜெயலலிதாவுடன் அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருக்க முடியவில்லையே என்று எப்போதும் மனம் வருந்தியதில்லை.

கடவுளே நல்ல வேளை காப்பாற்றினாய், அவரோடு ராசியாக தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சரவையிலும் இருந்திருந்தால்கோடீஸ்வரராக ஆகியிருக்க முடியும். ஆனால் குற்றவாளியாக நீதிமன்றங்களுக்கு அலைந்து அல்லவா திரிந்து இருக்கவேண்டும். நல்ல வேளை நான் தப்பித்தேன் என்றே கருதுகிறேன்.

ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியில் என்னை வளர்த்த கட்சியில் நான் வளர்த்த கட்சியில் லட்சோப லட்சம் அண்ணா திமுகதொண்டர்கள் இன்றும் என்னை நேசிக்கின்றனர். நானும் அவர்களை நேசிக்கின்றேன். இந்நிலையில் அக்கட்சியில் இருந்துஅன்னியப்படுத்தப்பட்டது எப்போதும் எனக்கு மனக்குறையே.

இப்படி பலவற்றை சொன்னாலும் பதில் முழுமை பெறாது. இன்னும் சொல்லாததும், வெளியே சொல்லக் கூடாத விஷயங்களும்பல உள்ளன. காலம் மறக்கடித்த பலவற்றை, மீண்டும் தூசி தட்டி நினைவூட்ட நாகரீகம் கருதி மனம் இடம் தரவில்லை.

என்னைப் பொருத்தவரை தமிழகத்தில் பாஜக கூட்டணி எதையும் அமைக்கும் வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆனாலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதில் கருத்து வேறுபாடும்கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில புதுக்கோட்டையில் நான் போட்டியிட அதிமுகவின் நிர்ப்பந்தத்தால் கட்சி வாய்ப்புவழங்கவில்லை. அப்போதுகூட நான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறாமல் அமைதி காத்தேன்.

எனவே, இப்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பதால் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன்திமுக கூட்டணி வைத்திருக்கும்போது, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

நான் தற்போது எம்.பியாக இருப்பதால், மாநில அரசியலை மறந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தேசிய அரசியலில் நான்இருப்பது ஒரு இடைவேளைதான். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். 2011ம் ஆண்டு தேர்தலில் நான்போட்டியிட ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X