For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸை உடைக்க அதிமுக தீவிரம்: ஜெ.வுடன் திண்டிவனம் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவின் ஜால்ராவாக மாறியுள்ள மாஜி காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி எல்லோரும் எதிர்பார்த்தபடி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

வன்னியர் தலைவரான திண்டிவனம் ராமமூர்த்தி திமுக தலைவர் கருணாநிதியையும், ஜி.கே.வாசனையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் பின்னணியில் அதிமுக இருப்பதாக காங்கிரசும் திமுகவும் கூறி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வரும் தேர்தலில் வட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு திமுக அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

காங்கிரஸை உடைக்க இவரை அதிமுக பயன்படுத்துவதாக வாசன் தரப்பு கூறி வருகிறது.

திண்டிவனம் ராமமூர்த்தி பகிரங்கமாகவே விமர்சித்துப் பேசி வந்தாலும் அவர் மீது கை வைக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறுகிறது. காரணம், அவரை ஏதாவது செய்யப் போய் அது ஒட்டுமொத்த வன்னியர்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்பதால் கட்சி மேலிடம் தயங்குகிறது.

தன்னை கட்சித் தலைமை நீக்காமல் உள்ளதால் திண்டிவனம் டென்சனில் உள்ளார். இந் நிலையில் தலைமைக்கு மேலும் தொல்லை தரும் வகையில் திண்டிவனம் ராமமூர்த்தி முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வரை சந்திக்க ஏற்கனவே நேரம் கேட்டிருந்தேன். இன்று ஒதுக்கியிருந்தார்கள். சுமார் முக்கால்மணி நேரம் முதல்வருடன் பேசினேன்.

நான் அதிமுகவில் சேரவில்லை. எப்போதுமே நான் காங்கிரஸ்காரன்தான். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம்தான் ஓடுகிறது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்று பின்னர் விலகிய பின்னர் வாஜ்பாயை கருணாநிதி சந்தித்துள்ளார். எனவே நான் ஜெயலலிதாவை சந்தித்ததில் பிரச்சினை ஏதும் இல்லை. இப்போதைக்கு இதைத்தான் கூற முடியும். மற்றவற்றை பிறகு சொல்கிறேன் என்றார் திண்டிவனம்.

ஜெயலலிதாவை சந்தித்த பின் திண்டிவனத்திற்குப் புறப்பட்டுச் சென்ற ராமமூர்த்தி அங்கு இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு விவரம்:

காங்கிரஸ் தலைவராக வன்னியர் ஒருவரைப் போடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனால் எந்தப் பிரயோஜனம் இருக்காது. கிருஷ்ணசாமியாக இருந்தாலும் சரி, வேறு எந்த வன்னியர் தலைவராக நியமிக்கப்பட்டாலும் சரி, திமுகவின் கொத்தடிமை என்ற அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து இருக்கத்தான் செய்யும்.

திமுகவை அண்டிப் பிழைக்க முடிவு செய்து விட்டது காங்கிரஸ். அப்படியிருக்கையில் யார் தலைவராக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்யும் காங்கிரஸ் கட்சி. இப்படிப்பட்ட ஒரு அவல நிலை தொடர்பான செய்திகள்பு ஏற்பட்டதுண்டா. வாசன் வந்த பிறகுதான் இத்தனையும் நேர்ந்தது.

காமராஜர் ஆட்சி என்று இன்று பேசுகிறார்கள். ஆனால் அதே காமராஜரை கட்சியை விட்டு விரட்டியது இதே காங்கிரஸ்தான். இன்று காமராஜர் பெயரைச் சொல்லாவிட்டால் காங்கிரஸே இல்லை.

நான் கட்சியிலிருந்து வெளியேறுவேனா என்பது குறித்து இப்போது கூற முடியாது. எல்லாம் கட்சி மேலிடம் எடுக்கப் போகும் நடவடிக்கையைப் பொறுத்துத்தான். எனது தன்மானத்தை நான் யாருக்காகவும் இழக்க முடியாது என்றார் திண்டிவனம்.

தன்னை கட்சியை விட்டு நீக்காமல் காங்கிரஸ் தலைமை டென்சன் கொடுத்து வருவதால் வேறு வழியில்லாமல் தானாகவே கட்சியை விட்டு விலகவும் திண்டிவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் கட்சியை தமிழகத்தில் தொடங்க திண்டிவனம் ராமமூர்த்தி திட்டமிட்டுள்ளதாகவும், அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

அப்படி அதிமுகவுடன் அணி சேர்ந்தால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டும், ஆட்சியில் எனது கட்சிக்கும் (திண்டினம் பிரிவு காங்கிரஸ்) பங்கு தர வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோருவாரா தன்மான திண்டிவனம்?

நடவடிக்கை உறுதி:வாசன்

இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன்,

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கூட்டணிச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முதல்வர் ஜெயலலிதாவை திண்டிவனம் ராமமூர்த்தி சந்தித்துள்ளார்.

கட்சிக்கு உடன்பாடான விஷயம் அல்ல இது. எனவே அவர் மீது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கும்படி அகில இந்தியத் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என்றார் வாசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X