For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முண்டா தட்டும் சரத்-திமுக டென்சன்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

Sarathkumar with Namitha

தூத்துக்குடியில் வரும் 11ம் தேதி நடைபெறவிருக்கிற சரத்குமார் ரசிகர் மன்ற மாநாடு திமுக தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏகப்பட்ட குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது திமுக. கூட்டணிக் கட்சிகளை சமாளித்து அவர்களுக்குரிய தொகுதிப் பங்கீட்டை முடிப்பதற்குள் திமுக தலைவர் கருணாநிதிக்கு போதும் போதுமென்றாகி விடும் போலிருக்கிறது.

இதில் வைகோ போட்ட இடியின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் திமுகவினர் மீளவில்லை.

இந் நிலையில் மற்றொரு விஷயம், திமுகவினரை டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது. அது சரத்குமார் ரசிகர் மன்ற மாநாடு. நாடார்களை திமுக ஒதுக்குவதாகக் கூறி கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தூர விலகி இருக்கிறார் சரத்குமார்.

அதிலும் கே.பி. கந்தசாமி நிறுவிய தினகரன் நாளிதழை திடீரென சன் டிவி வாங்கியது. இந்த டீல் மிகக் கமுக்கமாக நடந்து முடிந்தது. இதனால் நாடார் சமுதாயத்தினரிடையே அதிர்ச்சி பரவியது.

மேலும் மத்திய அமைச்சரவையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் திமுக பிரதிநிதித்துவம் தரவில்லை என்ற கோபமும் நாடார்கள் மத்தியில் உள்ளது.

இதனால் சரத்குமாரை திமுகவில் இருந்து விலக வைத்து அவர் தலையிைல் நாடார்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு கட்சியை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதை ராதிகா ஏற்கவில்லை என்று தெரிகிறது.

தொடர்ந்து திமுகவிடம் இருந்து விலகியிருந்த குமார் திருச்சி மாநாட்டில் கலந்து கொள்வது கூட சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் ஒருவழியாக அதில் கலந்து கொண்டார்.

இந் நிலையில் தூத்துக்குடியில் 11ம் தேதி நடைபெறவுள்ள ரசிகர் மன்றத்தின் 15வது ஆண்டு விழா மாநாட்டுக்காக தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன.

இந்த மாநாட்டை இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று திமுக தரப்பு முனுமுனுப்புடன் உள்ளது.

Sarathkumar with Radhika

ஆனால் இந்த மாநாட்டின் பின்னணியில் பல முக்கியான விஷயங்கள் உள்ளனவாம்.

அதிமுகவுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவர் சரத்குமார். அப்போதுதான் நாட்டாமை வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியிருந்த நேரம்.

அப்போது நாட்டாமை படத்தின் வீடியோ கேசட்டை தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதா-சசிகலாவுக்கு சரத்குமார் தர, அதை திடீரென ஜெஜெ டிவியில் ஒளிபரப்பிவிட்டனர்.

இதனால் பெரும் சர்ச்சையை ஏற்பட்டதோடு, கோபமடைந்த சரத்குமார், அதிமுகவிலிருந்து விலகினார். அதற்கு முன்பு வரை இரட்டை இலை எம்பிராய்டரி போட்ட சட்டை போட்டுக் கொண்டு திரிந்தவர் சரத்.

அதிமுகவிலிருந்து விலகிய அவரை கப்பென்று பிடித்து திமுகவில் சேர்த்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி. சரத்குமார் சார்ந்த நாடார் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என்ற நப்பாசையும் அதற்கு ஒரு காரணம்.

ஆனால் கதையே வேறு மாதிரியாக திரும்பிப் போனது. நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் திமுக சார்பில் நிறுத்தப்பட்டபோது, ஒட்டுமொத்தமாகக் கூடி சரத்தை தோற்கடித்து தங்களது கோபத்தை காட்டினர் நாடார்கள்.

இதனால் அப்செட் ஆகிப் போன சரத்துக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்தினார் கருணாநிதி. ஆனால் போகப் போக திமுகவில் சரத் ஓரம் கட்டப்பட்டார்.

திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளில் சரத்குமாரை காண முடியாமல் போனது. முக்கியப் போராட்டங்களுக்கும் அவர் வருவதில்லை. அவர் திமுகவில் இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள திமுக சார்பில் நடத்தப்படும் மண்டல மாநாடு, மாநில மாநாடு போன்றவற்றில் அவர் பேசும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.

திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த சரத்துக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த பொங்கல் தின சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யைக் கூப்பிட்டு தபால் தலையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

இது, அதிருப்தியை கூட்டி விட்டு விட்டது. திமுகவில் முக்கிய நடிகராக இருக்கும் உங்களைக் கூப்பிடாமல் விஜய்யைக் கூப்பிட்டு வெளியிட்டு விட்டார்களே என்று நாடார் சமூக விஐபிக்களும் குமாரை பிரைன் வாஷ் செய்ய, தேர்தல் பிரச்சாரத்துக்குப் போக டைம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.. சூட்டிங் இருக்கு என்று பேட்டி தந்தார் குமார்.

Sarathkumar with Radhika

இதையடுத்து நீங்க என்ன வராமல் போவது, நாங்களே உங்களைக் கூப்பிடலை என்று சட்டசபைத் தேர்தலில் சரத்குமாரை பிரசாரத்தில் அதிகம் ஈடுபடுத்துவதில்லை என்ற முடிவுக்கு திமுக வந்தது.

இதனால் கொந்தளித்துப் போயுள்ள சரத்குமார், தனது ரசிகர் மன்ற மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, தனது செல்வாக்கை கட்சித் தலைமைக்கு உணர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் இப்போதைக்கு திமுகவை விட்டு விலகும் மூடிலும் அவர் இல்லை என்பதால் திமுக திருச்சி மாநாட்டிலும் பங்கேற்றாராம்.

தனது பலத்தை கட்சிக்கு உணர்த்தவே தூத்துக்குடியில் ரசிகர் மன்ற மாநாட்டை சரத் ஏற்பாடு செய்துள்ளார் என்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் சரத்குமாரை வரவேற்க 1,000 கார்களை ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

சுமார் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்ள விருக்கிறார்களாம். கிட்டத்தட்ட கட்சி மாநாடு போல திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் மூலம் கட்சித் தலைமை தனது பலத்தை உணர்ந்து கொண்டால் சரி, இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குமார் முடிவெடுப்பார் என்கிறார்கள்.

பேசாமல் திமுக, எங்கேயாவது நாடி ஜோதிடம் பார்த்தா நல்லது போல இருக்கே...!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X