நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம்பாடச் சென்ற ஓதுவார், 80 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட ஊர்வலமாகச் சென்ற ஓதுவார் உள்ளிடட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரத்தில் உள்ள புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அங்குள்ள தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் தமிழ் சிவாச்சாரியார்களுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது.

கோவிலில் தமிழில் தேவாரம் பாட குமுடிமூலை நால்வர் மடத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி தொடர்ந்து முயன்று வருகிறார். ஆனால் இதற்கு நீதிமன்றத்தில் தீக்ஷிதர்கள் சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இருப்பினும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தேவாரம் பாட ஆறுமுகச்சாமிக்கு இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நேற்று ஆறுமுகச்சாமி தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் கோவிலை நோக்கி ஊர்வலமாக கிளம்பினர். ஓதுவாருடன் விடுதலைச் சிறுத்தைகள், பாமக, தி.க. மற்றும் பல்வேறு அமைப்புகளின் தொண்டர்களும் சென்றனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஓதுவார் ஆறுமுகச்சாமி நடராஜர் கோவிலில் தேவாரம் பாட கோர்ட் நிரந்தர தடை விதித்துள்ளது. எனவே அவரை அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கூறினர்.

இதையடுத்து ஓதுவார், அவருடன் வந்தவர்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

ஓதுவாருடன் வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...