• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெ.வை இரட்டை அர்த்தத்தில் விமர்சிக்கவில்லை- கருணாநிதி

By Staff
|

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இரட்டை அர்த்தம் தொணிக்க விமர்சிக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கருணாநிதி பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

புதிய சட்டபேரவை அமையும் இடம் குறித்து தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர், உள்ளாட்சிதுறை அமைச்சர் ஆகியோருடன் விவாதித்தேன். விரைவில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் புதிய சட்டபேரவை கட்டும்பணி ஆரம்பிக்கப்படும்.

ஒப்பந்தபுள்ளி ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அடிக்கல் நாட்டு விழா நடக்கும். இது உலக அளவிலான டெண்டராக இருக்கும்.

கட்டுமானப் பணியின்போது, அந்த வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும். புதிதாக கட்டப்பட்ட ராஜாஜி மண்டபம், எம்எல்ஏக்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடம் ஆகியவை அகற்றப்பட மாட்டாது.

பழைய எம்எல்ஏக்கள் விடுதி அகற்றப்படும். இந்த கட்டிடத்திற்கான வரைபடம் வந்தவுடன் அதற்காக செலவு விவரங்கள் தெரிய வரும்.

ஹெல்மட் குறித்த பிரச்சினையில், நாங்கள் நீதிமன்ற கருத்தை செயல்படுத்துகிறோம். டெல்லி போன்ற மாநகரங்களில் பின்னால் அமர்ந்து செல்கிற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது போல் இங்கேயும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்ததால் அதை ஏற்று, இங்கும் அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பெண்களுக்கு மட்டும்தான் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படமுடியாது.

இது மாதிரியான பிரச்சனைகளில் அரசு விளக்கங்கள் மட்டுமே தரமுடியுமே தவிர அதிகாரம் செய்யமுடியாது. இந்த அரசை பொறுத்தவரையில் அதிகாரத்தை பயன்படுத்துவதை விரும்பவில்லை. நீதிமன்ற கருத்தை மதிக்க வேண்டும்.

அவரவர் பாதுகாப்பிற்கு அவரவர் தான் பொறுப்பு, அதை அவர்கள் ஏற்காவிட்டால் என்ன செய்யமுடியும்.

டெல்லி பயணம் குறித்து?

ஜூன் 13,14,15ம் தேதிகளில் டெல்லியில் இருப்பேன்.

கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறை மீறப்பட்டிருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?

கோடநாடு மலைப்பிரதேசம், ஆகையால் அங்கு வீடுகட்ட சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கு வீடு அல்ல, மாளிகையே கட்டியுள்ளனர். அந்த பகுதியின் மொத்த பரப்பளவு 43,585 சதுர அடியாகும். இதில் 38,000 சதுர அடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை.

இது யாருக்கு சொந்தம் என விசாரிக்க சென்ற அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஜெயலலிதா அம்மையார் இந்த மாளிகை தனக்கு சொந்தமில்லை, தங்குவதற்காகத்தான் அங்கு சென்றேன், அதை பெரிதாக்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கும் சசிகலாவிற்கும் அந்த மாளிகையில் உள்ள தொடர்பை இன்றைக்கு கூட நான் வெளியிட்டுள்ளேன்.

அந்த நிறுவனத்தின் முதலீட்டு கணக்கை பார்த்தால், கேபிடல் அக்கவுண்டில் சசிகலாவிற்கு கடந்த 2005ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியன்று ரூ.1 கோடியே 80 லட்சம் ஆரம்ப முதலீட்டு தொகையாக இருந்துள்ளது. இதுவே கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இவருடைய இறுதி முதலீட்டுத் தொகையாக உள்ளது.

இதே போல் ஜெயலலிதாவின் பெயரில் முதலீட்டு தொகை 2005ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியன்று ஆரம்ப முதலீட்டு தொகை ரூ.1 கோடியே 80 லட்சமாகவும், 2006ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியன்று இறுதி முதலீட்டில் தொகையாக ரூ.1 கோடியே 80 லட்சம் இருந்துள்ளது. இது நேற்று நான் ஆதாரபூர்வமாக வெளியிட்ட தகவல்.

இன்றைக்கு எனக்கு பிரபல பத்திரிக்கையாளர் மூலம் தகவல் கிடைத்தது. இதில் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. இந்த சொத்துக் கணக்கை கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் வேட்பு மனுதாக்கலின் போது ஜெயலலிதா குறிப்பிடாமல் மறைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இது உண்மை என நிரூபணமானால், எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவே முடியாது. அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெற்றி பெற்றதும் செல்லாது.

இதுசம்பந்தமாக உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பீர்களா?

இப்போதுதான் நீங்கள் யோசனை சொல்லியிருக்கிறீர்கள், யோசிக்கலாம்.

விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் அதற்கிடையே நாங்கள் ஏதோ சோதனை செய்யப் போவதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பொய்.

ஜெயலலிதா வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடியுள்ளது பற்றி?

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. சோதனை செய்ய போவதாக அவர்களே பிரச்சாரம் செய்கின்றனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் நீங்கள் எழுதியிருப்பதாக கூறியுள்ளது பற்றி?

இரட்டை அர்த்தம், இரட்டை இலை எல்லாம் அங்கேதான். இரட்டை அர்த்தத்துடன் நான் எழுதவில்லை. அவர் மது அருந்துவதாக நான் கூறியுள்ளதாக அவர் கூறுகிறார். நான் அவ்வாறு கூறவில்லை. அவர்தான் ஏற்கனவே ஒரு முறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மது அருந்திவிட்டு சட்டசபைக்கு வருவதாக சொன்னார். அவ்வாறு பேச எனக்கு தெரியாது.

கல்வி கட்டணங்கள் அதிகமாக உள்ளதாக பாமக கூறுகிறதே?

அரசாங்க கல்லூரிகளில் அல்ல, ஏற்கனவே அதிமுக ஆட்சிகாலத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் பல மடங்கு குறைக்கப்பட்டுவிட்டது. சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பாமக சார்பில் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து அரசு கவனிக்கும்.

மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா?

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X