For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.

முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.

தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.

இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,

தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X