For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக, இந்து முன்னணி, வி.எச்.பி அலுவலகங்கள் மீது திமுகவினர் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினர் இன்று ஆவேசத் தாக்குதலில் இறங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர். அதேபோல இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் அலுவலகங்களும் தாக்கப்பட்டன. தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மேயர் மா.சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Attacked in Chennai BJP Officeராமர் பால சர்ச்சை தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாஜக எம்.பியுமான ராம் விலாஸ் வேதாந்தி என்பவர், முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேதாந்தியை மிகக் கடுமையாக விமர்சித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வேதாந்திக்கு, அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம், வட நாட்டுத் தருக்கனுக்கு சரியான பாடம் புகட்ட புறப்பட்டிடுவோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலலாயத்திற்கு அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மேயர் மா.சுப்ரமணியம், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அன்பழகன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்தனர்.

பாஜக அலுவலகம் உள்ள தெருவில் நின்றபடி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வேதாந்தியின் கொடும்பாவியை அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

பின்னர் அலுவலகத்தின் மீது சரமாரியாக கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். பெரிய பெரிய கற்களைக் கொண்டு திமுகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அலுவலகம் உள்ளே இருந்த கொடிக் கம்பத்தைப் பிடுங்கி அதைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை திமுகவினர் அடித்து நொறுக்கினர்.

தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அலுவலகத்திற்குள் பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல பெண் Attacked in Ex MP Rajas homeநிர்வகாகிள் இருந்தனர். அவர்களில் சிலர் மீது கற்கள் வந்து விழுந்தன.

தகவல் அறிந்ததும் அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். போராட்டத்தில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்து முன்னணி அலுவலகத்தில்....

இதேபோல, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுலகத்திலும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

50க்கும் மேற்பட்ட திமுகவினர் அங்கு வந்தனர். இந்து முன்னணி அலுவலகத்திற்குள் புக முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து தெருவில் நின்றபடி கற்களை சரமாரியாக வீசி அலுவலகத்தைத் தாக்கினர். இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் அவர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.

இங்கு இப்படிப் பேசுவது போல கருணாநிதியால் அயோத்தியிலோ அல்லது காசியிலோ போய் பேச முடியுமா என்று கேட்டார்.

திமுகவினரின் போராட்டத்தால், நகர் முழுவதும் உள்ள இந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வி.எச்.பி. அலுவலகம் மீதும் தாக்குதல்:

இதேபோல, தி.நகர், ராமானுஜம் தெருவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தையும் திமுகவினர் அடித்து ெநாறுக்கினர்.

20க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டு வந்து கற்களை வீசி வி.எச்.பி. அலுவலகத்தைத் தாக்கினர். வேதாந்திக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

எச்.ராஜா, மாமியார் வீடு சூறை:

இதேபோல காரைக்குடியில் உள்ள பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா வீட்டிற்குள் ஒரு கும்பல் நேற்று இரவு புகுந்து கல் வீசித் தாக்கியது.

இதில் வீட்டின் கதவு கண்ணாடிகள் உடைந்தன. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் அக்கும்பல் அடித்துத் தாக்கியது. இதில் அவை சேதமடைந்தன.

இதேபோல ராஜாவின் மாமியார் உமா வீட்டையும் திமுகவினர் தாக்கினர். அதேபோல நகரில் உள்ள பாஜக கொடிக் கம்பங்களும் வெட்டித் தள்ளப்பட்டன.

நெல்லையில் ..

நெல்லையில், முதல்வர் கருணாநிதி மற்றும் வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் போட்டி போட்டு எரிக்கப்பட்டன.

நெல்லை சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு பகுதியில் திமுகவினர் சுமார் 50 பேர் கூடினர். பா.ஜ மற்றும் வேதாந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டோவில் எடுத்து வந்திருந்த வேதாந்தியின் உருவ பொம்மையை எடுத்து நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர்.

திமுகவினர் கொடும்பாவி எரித்த 1 மணி நேரத்திற்குள் பாஜகவினர் சிலர் டவுன் சொக்கப்பானை முக்கில் கூடி முதல்வர் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தனர்.

திமுக தொண்டர்கள் வேதாந்தி உருவ பொம்மையை மாலைராஜா எம்.எல்.ஏ தலைமையில் நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர். அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.

மேலும் வள்ளியூர், அம்பை, பாவூர்சத்திரம், செங்கோட்டை சங்கரன்கோவில் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பாஜக கொடிக் கம்பங்கள் நூற்றுக்கணக்கில் வெட்டி எறியப்பட்டன. வேதாந்தி உள்ளிட்டோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

கன்னியாகுமரியில் ..

குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கொடிக் கம்பங்கள் வெட்டித் தள்ளப்பட்டன.

புத்தளம், மேலகிருஷ்ணன்புரம், சம்பக் கரை, பொட்டல் விலக்கு, கொய்யன்விளை, தடிக்காரன்கோணம், வீரப்புலி, நாகர்கோவில் 38வது வார்டு, இருளப்பபுரம், இடலாக்குடி சாஸ்திரி நகர் ஆகிய இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் வெட்டித் தள்ளப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X