For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத வெறி சக்திகள் கருணாநிதியை மிரட்டுவதா? - ராமதாஸ் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு முதல்வராக இருக்கிற கருணாநிதியை மத வெறி சக்திகள் மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வ இந்து பிரஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் வகையில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழர்களை எல்லாம் திடுக்கிட வைத்துள்ளது.

பெங்களூரில் முதல்வரின் மகள் செல்வியின் விட்டை தாக்கியவர்கள், தமிழக அரசு பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தி 2 தமிழர்களின் உயிரை பறித்தவர்களும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தான்.

இந்த மதவாத சக்திகளின் மிரட்டலை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களது கொலைவெறித் தாக்குதலுக்கு பெரும் பின்னணி இருக்கிறது. முன்பு காமராஜர், காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை தாக்கி தீ வைத்துக் கொளுத்தி அதன்மூலம் அவரை கொல்ல முயன்றவர்கள் இந்த மதவெறி சக்திகள் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே முதல்வருக்கு எதிரான கொலைவெறி தாக்குதலை தூண்டிவிட்டிருக்கும் இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உடனடியாக மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே கருணாநிதி சொந்தமானவர் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழர்களுக்கு அவர் முதலமைச்சர். 84 வயதிலும் ஒரு இளைஞரைப் போல தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் சிந்தித்து உழைத்து கொண்டிருப்பவர். ஒரு பெரும் கொள்கை மரபுவழிக்குச் சொந்தக்காரர். இவர் பின்பற்றி வந்துள்ள கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர். அந்த வகையில் துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.

தமிழர்களின் நீண்டநாள் கனவான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில், அதை முடக்கி பகல் கனவாக்க சிலர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு ராமர் பெயரையும், ராமர் பாலத்தின் பெயரையும் பயன்படுத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பதையும் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் முதல்வர் சில கருத்துக்களை வெளியிட்டார்.

உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவும் கிடையாது. ஜனநாயக நாட்டில் கருத்துக்களை வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கின்றது.

ஒருவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மாற்றுக் கருத்துக்கள் வெளியிடலாம். அதற்கு மாற்றாக கொலை வெறியை தூண்டும் வகையில் பேசுவதையோ, செயல்படுவதையோ ஏற்று கொள்ள முடியாது.

தமிழகம் பெரியாரின் பூமி. இன்று பெரியார் நம்முடன் இல்லை. ஆனால் அவரது பகுத்தறிவு கொள்கைகளும், சுயமரியாதை சிந்தனைகளும் இன்றைக்கும் தமிழர்களை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன.

இங்கே மதத் தீவிரவாதிகளின் சலசலப்பு எடுபடாது என்பதை வேதாந்திகளும், அவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் மதவாத சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத சக்திகள் ஒருபுறம் திசை திருப்பிக் கொண்டிருக்கையில், தமிழர்களை பெரியாரின் பகுத்தறிவு பாதையில் இருந்தும், சிந்தனைகளிலிருந்தும் தடம்புரளச் செய்வதற்கான சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தகையச் செயலில் ஈடுபடும் சக்திகளையும் நம் இளைஞர்களையும் அடையாளம் காட்ட நாம் தவறிவிடக்கூடாது. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், பெரியாரின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இந்த ஆபத்தையும் உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X