For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக பந்த்: விஜயகாந்த், சரத்குமார் எதிர்ப்பு!- ''மக்களை பலிகடாவாக்கும் கருணாநிதி''

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களைப் பாதிக்கும் வகையில் திமுக கூட்டணி அறிவித்துள்ள பந்த்திற்கு தேமுதிக ஆதரவு தராது என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல திமுக பந்த்துக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கைத் துண்டித்துக் கொண்டு வருவோருக்கு எடைக்கு எடை தங்கம் தருவதாக வேதாந்தி கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இதை வேதாந்தி மறுத்துள்ளார்.

அவர் அப்படி சொல்லியிருந்தால், கொலை மிரட்டலுக்கான குற்றப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசுகளை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கலாம்.

ஆனால் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் அறிக்கை விடச் செய்து, திமுகவினரை ஏவி விட்டு பாஜக தலைமை அலுவலகத்தையும், தமிழகத்தில் உள்ள பிற இடங்களில் உள்ள அலுவலகங்களையும் தாக்கினர்.

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசே இப்படி பலாத்காரத்தில் ஈடுபட்டது கண்டித்தக்கத்தாகும்.

சேது சமுத்திரத் திட்டம் தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்பு நடத்தப் போவதாக திமுகவினர் அழைப்பு விடுத்துள்ளது அவசியமற்றதாகும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, முதல்வரே முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து நெருக்கடி தர முயலுவது அந்த உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

இந்த அளவுக்குப் பிரச்சினை செல்வதற்கு காரணமே முதல்வர் கருணாநிதிதான். வெறும் கால்வாய் வெட்டுதல் என்ற நிலையிலிருந்து, ராமர் பிரச்சினையாக மாற்றி விட்டு கலவரத்திற்கு வித்திட்டு விட்டு இன்று தோழமைக் கட்சிகளைப் பலிகடாவாக்குகிறார்.

இது போதாதென்று தமிழக மக்களையும் தான் வளர்த்த வீண் வம்புக்கு இரையாக்கப் பார்க்கிறார்.

நாங்கள் எப்போதுமே முழு அடைப்புப் போராட்டங்களை ஆதரிப்பதில்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள், அன்றாடம் பிழைப்பு தேடுபவர்கள், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வோர் போன்ற அனைத்துத் தரப்பு மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர்.

ஒரு தகுந்த காரணத்திற்காக இது நடத்தப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. மத்திய அரசுக்கு தெரிவிக்க முழு அடைப்பு என்கிறார்கள். இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலா மத்திய அரசு உள்ளது.

'பேசாத சொற்களுக்கு நாம் எஜமானர்கள், பேசிய சொற்கள் நமக்கு எஜமானர்கள்' என்ற அரேபிய பழமொழிக்கேற்ப, முதல்வர் என்ற நிலையை மறந்து விட்டு பேசி விட்டு, இன்று 'புலிக்குப் பயந்தவர்கள் என் மீது படுங்கள்' என்றவன் கதையைப் போல, தோழமைக் கட்சிகளையும் தமிழ் நாட்டு மக்களையும் இழுக்கிறார்.

இந்தப் போராட்டம் தேவையற்றது, தீதானது, திசை திருப்புவது. எனவே இந்தப் போராட்டத்தை தேமுதிக ஆதரிக்காது. சேது சமுத்திரத் திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பும் கருணாநிதிதான் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

சரத்குமார் அறிக்கை:

சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்துக்கு தமிழகத்தில் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிறு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றுதான் கோருகின்றனர். இந்த சிறுமாற்றத்தைக் கொண்டு சேது திட்டத்தில் வழி உள்ளது.

அந்தத் திட்டத்தையாருமே எதிர்க்காத நிலையில் எதற்காக பந்த் என்று புரியவில்லை. இந்த பந்த்தால், தொழிற்சாலைகள், சிறு வணிகர்கள், சாதாரண மக்கள் என அனைவருமே பாதிக்கப்படுவார்கள். பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

மத்திய அரசுடன் கூட்டணியில் இருப்பதால், தோழமைக் கட்சிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களுடன் பிரதமரை டெல்லியில் போய் நேரடியாக சந்தித்து பேசி மாநிலத்துக்குப் பலன் அளிக்கும் வகையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், மக்கள் உறுதியாக இருப்பதை தெளிவுபடுத்தி இருக்கலாம்.

நஷ்டத்தை விட இந்த சந்திப்பு நிகழ்ச்சியால் ஏற்படும் செலவு மிகக் குறைவாகவே இருக்கும். எனவே இந்த முழு அடைப்புப் போராட்டத்ைத முதல்வர் கருணாநிதி வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X