For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சேது ராமன்' திட்டம் என பெயர் சூட்டவும் தயார்- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

ஜெயலலிதாவின் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவருக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ அப்படியே தான் அவருக்கும் இப்போது பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என முதல்வர் கருணாநிதி கூறினார்.

Karunanidhiசட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் கலாட்டா செய்து, வெளியேற்றப்பட்ட பின் கருணாநிதி கூறியதாவது,

விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி அவையில் எதிர்பாராத விதமாக, நடந்திருந்ந்தாலும், எதிர்ப்பார்த்தபடியே நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில், 'அமைச்சர் ஸ்டாலின் பேச எழுந்தார் அதைத் தொடர்ந்து நடந்த தகராறில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது' என்று வரப்போகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் அமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்காவிட்டாலும் கூச்சல்-குழப்பம் நடந்து இருக்கும். காரணம் இது திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்று சட்டசபை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டதோ அப்போதே, அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அப்படியே நடக்க தயாராகி விட்டார்கள். அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் முன்னாள் முதலமைச்சருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது.

கடந்த கால ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவருக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ அப்படியே அவருக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. இது காவல்துறையினருக்கும் தெரியும். அரசு அதிகாரிகளுக்கும் தெரியும்.

முன்னாள் முதலமைச்சராக இருந்தாலும் அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. அதன்படி அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்து இந்த அவையிலேயே அறிவித்து இருக்கிறேன். அதில் எந்த அளவும் குறைக்கப்படவில்லை.

ஜெயலலிதா கேட்டபடி கடந்த ஆட்சியில் அவரது மெய்க்காவலர்களாக இருந்த விஜயகுமார், முத்து மாணிக்கம், குப்புராஜ் ஆகியோர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு 9 எம்.எம். பிஸ்டல் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வீட்டில் மெய்க் காவலர் குப்புராஜ் பணியில் இருந்தபோது தான் ஒருவர் வீட்டில் நுழைந்து ஊமை போல் நடித்ததாகக் கூறப்பட்டு வேலை கேட்டு வந்தார் என்றும், அதிமுக அனுதாபி என்றும் கூறப்பட்டது.

அவர் நுழைந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி குப்புராஜ் தான் இதற்கு பொறுப்பானவர். அவர் உரிய முறையில் விசாரிக்கப்படுவார். இதில் ஏன் குறைபாடு ஏற்பட்டது என்பது அப்போது தெரியவரும்.

இத்துடன் கிருஷ்ணராஜ், அசோகன், கோதண்டபாணி ஆகிய 3 கூடுதல் மெய்க்காவலர்களும் பணியில் உள்ளனர். அவர்களுக்கு ஏ.கே.47 துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் முன்னாள் முதல்வர் கேட்டுக்கொண்டபடியே அங்கு பாதுகாப்பு பணியை கவனித்து வருகிறார்கள்.

என்னையும் கோட்டையிலும், வீட்டிலும் சந்திக்க பல பேர் வருகிறார்கள். ஆனால் என்னை கொல்ல வருவதாக நான் குற்றச்சாட்டு கூறியது இல்லை. இந்தப் பயம் இருக்கக்கூடாது. அரசில் இருப்பவர்களுக்கு இந்த பயம் இருந்தால் ஏதோ நோய் என்பார்கள். நான் அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை.

முன்னாள் முதல்மைச்சருக்கு ஒரு ஷிப்டுக்கு 50 பேர் வீதம் 3 ஷிப்டுகளுக்கு 150 காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இன்னும் பாதுகாப்பு தேவையானால் அதை வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

இன்று சில பத்திரிகைகளில் நானும் உள்ளாட்சித்துறை அமைச்சரும் ஏதோ பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்படிப்பட்ட பயங்கரமான செய்திகள் வந்ததால் உரிமை பிரச்சினை கொண்டு வந்து இருக்கிறார் அமைச்சர் ஸ்டாலின்.

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பலமுறை இது போன்று பேசி இருக்கிறார். என் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவர் பிரேதம் வாசலில் இருக்கும்போதே, மோரில் விஷமா, பாலில் விஷமா என்ற பட்டிமன்றமே நடந்தது.

அந்தப் பழக்கதோஷம் தான் இப்போதும் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதற்காக செய்கிறார்கள்.

எல்லோருக்கும் பொறாமை வருவது சகஜம் தான். திடீரென்று பெரிய பெரிய விழா நடக்கிறது. மக்கள் எல்லாம் வருகிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்திற்காக நாம் உண்ணாவிரதம் என்று முன்கூட்டியே அறிவிக்காமல் இருக்கும்போதே செய்தி கேள்விப்பட்டு, அவர்களாக லட்சக்கணக்கிலே வந்து கூடுகிறார்கள். சென்னையிலே மாத்திரமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் வந்து கூடுகிறார்கள். சேது சமுத்திரம் வேண்டுமென்று சொன்னவர்கள், இப்போது வேண்டாமென்கிறார்கள்.

இது என்ன வேடிக்கை என்று பார்க்கிறார்கள். வேண்டும் என்று தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டு விட்டு சேது சமுத்திரத் திட்டம் வராவிட்டால் ஒரு கை பார்ப்பேன் என்றெல்லாம் சூளுரைத்தவர்கள், வந்தால் ஒரு கை பார்ப்பேன் என்று சொல்கிற அளவுக்கு இன்றைக்கு மாறியிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசும், இங்கே இருக்கிற நம்முடைய அரசும் இணைந்து இந்த பெயரை பெற்று விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தையே சீர்குலைக்க தேவையில்லாமல் ராமரை பிடித்து இழுத்து ஏதோ ராமர் என்றால் எனக்கோ, பேராசிரியருக்கோ பிடிக்காது என்பதைப் போல் காட்ட முயற்சிக்கிறார்கள்.

நண்பர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விழாவிலே பேசும்போது சொன்னார். ராமரை உங்களுக்குப் பிடிக்காது என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள், வடக்கே நான் போனேன், அங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றார்.

அதற்கு நான் சொன்னேன், நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் உங்களுக்குத் தான் அந்தச் சாமியார்கள் எல்லாம் பழக்கமாயிற்றே, அவர்களிடம் சொல்லுங்கள் அப்படியெல்லாம் எங்களுக்கு ராமர் மீது விரோதம் கிடையாது என்று தான் நான் அவரிடம் சொன்னேன். எங்களுக்கு ராமர் மீது ஒன்றும் கிடையாது.

வேண்டுமானால் 'சேது ராமன்' திட்டம் என்றே கூட பெயர் வையுங்கள். எங்களுக்கு வேண்டியது திட்டம். எங்களுக்கு வேண்டியது அந்த வழி, அந்த வாய்க்கால். எங்களுக்கு வேண்டியது தமிழ்நாட்டின் வளம். எங்களுக்கு வேண்டியது தமிழன், அந்த காலத்திலே அயல் நாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்தானே, வேலைத் தேடி சென்றானே அந்த நிலைமை இல்லாமல் தமிழன் இங்கேயே வாழ வேண்டும் என்ற அந்த நிலை பிறக்க வேண்டுமென்பதற்காகத் தான்.

அதற்காகத்தான் இந்தத் திட்டங்களை நாங்கள் இன்றைக்குச் சொல்கிறோமே தவிர, ஏதோ வீண் பிடிவாதத்திற்காக ராமனை இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக யாரும் இதைச் சொல்லவில்லை. எங்களுக்கு ராமன் என்றாலும் ஒன்றுதான், ஏசு என்றாலும் ஒன்று தான், அல்லா என்றாலும் ஒன்று தான், எல்லாம் ஒரே கடவுள் தான்.

எதிர்க் கட்சிக்காரர்களை கொன்று தீர்த்துவிட்டு வாழ வேண்டுமென்று விரும்புகிற அரசு அல்ல. அணு அளவும் யாருக்கும் ஒரு துன்பமும் விளைவிக்காமல், ஜனநாயகத்திற்கு ரணம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த மாமன்றத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

இன்றையதினம் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இனியாவது ஜனநாயகத்தை அனைவரும் காப்பாற்ற சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X