For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்லவி பாட வேண்டாம்-டி.ஆர்.பாலுவுக்கு ராம.கோபாலன் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: ராமர் பாலம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஓட்டை மியூசிக் ரெக்கார்டு போல திரும்ப திரும்ப ஒரே பல்லவி பாடுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் திமுகவில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்கள். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறியே தீரும். அடுத்த ஆண்டு நவம்பரில் கப்பல் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி, சேது ராமன் என்று பெயர் இருந்தாலும் பரவாயில்லை என்கிறார். கனிமொழி சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தமிழர்களின் சுயமரியாதையை தகர்க்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

150 ஆண்டு கால கனவுத்திட்டம் என்றால் இதற்கு முன் எத்தனை முறை அரசாண்டது திமுக. அப்பொழுதெல்லாம் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தியது ஏன். இது சுயமரியாதையே தகர்க்கும் முயற்சி அல்ல. அழிக்கும் முயற்சி அல்லவா

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் யாருக்குமே ஆட்சேபனை இல்லை. ஆனால் அதை ராமர் பாலத்திற்கு சேதமின்றி, மாற்றுப் பாதையில் அமைக்கலாம் என்று தான் ராமர் பாலப்பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதற்கு ஆதாரம் எங்களுக்கு அணுசக்தி ஒப்பந்தம் முக்கியமல்ல. அரசுதான் முக்கியம் என்று கூறியிருப்பது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

இந்த திட்டத்தின் காரணமாக மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த திட்டத்தை கைவிடத் தயாராக மத்திய அரசு இருப்பதாக தோன்றுகிறது. டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா விழாவில் பிரதமரும், சோனியா காந்தியும் ராமருக்கு திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வணங்கியுள்ளார்கள். ராவணனின் உருவபொம்மை எரிவதைக் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் டி.ஆர்.பாலு நியமித்துள்ள குழுவின் பரிந்துரைகளின் பேரில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் மறைமுகமாக உச்ச நீதிமன்றத்தை நிர்பந்திப்பதாகவே தோன்றுகிறது. இந்த திட்டத்தை ஏதாவது சாக்கு, போக்கு சொல்லி நிறைவேற்றாமல் இருக்க நினைக்கிறார் என்றே தோன்றுகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை எவருமே எதிர்க்காத நிலையில் எதிர்க்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்று இவர்களும், கூட்டணி கட்சிகளும் கீறல் விழுந்த ரெக்காடு போல பாடிய பல்லவியை திரும்ப திரும்ப பாடுவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

எதை இழந்தாலும் ராமர் பாலத்தை இழக்க மாட்டோம். இன்று நாடு முழுவதும் தேசிய அலை வீசி வருகிறது. இவர்கள் போடும் தப்புக்கணக்கு தவிடு பொடியாகும் என்று ராம.கோபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X