For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.பிக்களை மதிக்காத மன்மோகன்: நாயுடு கடும் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

Chandrababu Naiduடெல்லி: ஆந்திர மாநில விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனு கொடுக்க நேரம் கொடுக்காமல், எம்.பிக்கள் குழுவை அவமதித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தெலுங்கு தேச தலைவரும், 3வது அணியின் ஒருங்கிணைப்பாளருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் நெல் விவசாயிகளுக்கு ஆதார விலையைக் கூட்டித் தர வேண்டும் என்று கோரி பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சந்திரபாபு நாயுடு தலைமையில் 10 பேர் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள இக்குழு பிரதமரைச் சந்திக்க முயற்சித்தது. ஆனால் நேரம் கொடுக்கப்படாததால் நேற்று கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, பிரதமர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களை சந்திக்க நேரம் ஒதுக்காதது மட்டுமல்ல, எங்களின் கோரிக்கை என்ன என்று அறியக் கூட அவர் தயாராக இல்லை. இது ஜனநாயகத்திற்கும், இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் மிகப் பெரிய அவமானமாகும்.

அக்டோபர் 10ம் தேதி முதலில் அவருக்கு கடிதம் எழுதினோம். பிறகு அக்டோபர் 15ம் தேதி கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை இவற்றுக்குப் பதில் ஏதும் வரவில்லை.

மன்மோகன் சிங் ஒரு தனியார் நிறுவனத்தின் தலைவர் அல்ல, மாறாக, இந்திய அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவை, எட்டு ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒருவரது தலைமையிலான குழுவை, அவர் சந்திக்க மறுப்பது, நிராகரிப்பது என்பது ஜனநாயகத்தின் மீதான மிகப் பெரும் தாக்குதலாகும்.

எனக்கோ, எனது கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கோ (3வது அணி) பிரதமரின் இரக்கம் தேவையில்லை. விவசாயிகளின் துயர நிலையை எப்படி வெளிக் ெகாண்டு வருவது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டும் பாரபட்ச நிலையை எப்படி வெளிப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும்.

கோதுமை உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அதிக அளவிலான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது. ஆனால் நெல் உற்பத்தியாளர்களை அது புறக்கணிக்கிறது. இப்படி ஒரு துறையைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே பாரபட்சமான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பது நியாயமற்றது. அதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 1000 ஆதார விலையை மத்திய அரசு தர வேண்டும். மேலும் அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும்.

அணு சக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் ஏழை, பணக்காரர் வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளோம்.

இந்திய, அமெரிக்க அனு சக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் விரும்புகிறது என்றார் நாயுடு.

ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது மாநாடு விஜயவாடாவில் நவம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக நாயுடு தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X