For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பருவ மழை தீவிரம்- பல மாவட்டங்களில் கன மழை: 3 மாவட்டங்களில் வெள்ள அபாயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் திருவாரூர், நாகப்பட்டனம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

பிச்சாவரம் செல்லும் சாலையில், தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கரூர் அமராவதி ஆற்றில் பெரும் வெள்ளம் ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய காவிரி மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

தஞ்சையில் பாசன வாய்க்கால்கள் உடைப்பெடுத்ததால், வயல்களில் நீர் புகுந்துள்ளது. இதனால் நெற் பயிர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

கடலுக்கு மீன் பிடிக்கப் போன 15 விசைப் படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. மீனவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. கும்பகோணம் அருகே 5000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.

காவிரி மாவட்டங்கள் தவிர கடலூர் மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விவசாயி பலி

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மாங்காடு என்ற இடத்தில் தரையில் கிடந்த மின்சார வயரை மிதித்த விவசாயி ஒருவர் பலியானார்.

கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வந்து கொண்டுள்ளது ஆனால் அணையிலிருந்து மிகக் குறைந்த அளவிலான தண்ணீரே திறக்கப்படுவதால், மேட்டூர் நீர் மின் நிலையத்தில் மின்
உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அணை நிரம்புகிறது

நெல்லை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

நெல்லையில், 22ம் தேதி மாலை துவங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் 5 மிமீ, ஆயக்குடியில் 3.2 மிமீ, நாங்குநேரியில் 14 மிமீ, பாளையங்கோட்டையில் 27 மிமீ, ராதாபுரத்தில் 8 மிமீ, சங்கரன்கோவிலில் 28.2 மிமீ, சிவகிரியில் 12.6 மிமீ, தென்காசியில் 4.1 மிமீ, நெல்லையில் 18.2 மிமீ, ஆலங்குளத்தில் 25.32 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

அணைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108.95 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 658 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 512 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலணையில் 35 மிமீ மழை பதிவாகியுள்ளது. கீழலணையில் 35 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 121.46 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 191 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குண்டாறு, அடவிநயினார் அணைகள் நிரம்பிவிட்டது. 144 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் விரைவில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி அரபிக் கடலுக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X