For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 450 கோடியில் செரியன்-தமிழக அரசு இணைந்து உருவாக்கும் மருத்துவ கிராமம்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: டாக்டர் கே.எம். செரியனின் பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்துடன் இணைந்து திருவள்ளூர் அருகே பிரான்டியர் மெடிவில்லி என்ற மருத்துவ கிராமத்தை உருவாக்கவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

இருதய அறுவை சிகிச்சை துறையில் முன்னோடியாக திகழ்பவர் டாக்டர் கே.எம்.செரியன். இவர் நாட்டிலேயே முதன் முதலில் இருதய ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை, இருதய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை இருதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர்.

டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் அமைத்து அதன் மூலமாக இருதய துறையில் சிறப்பான மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை சென்னையில் நடத்தி வருகிறார்.

செரியன் டிட்கோவுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பிரான்டியர் மெடிவில்லி என்ற பெயரில் மருத்து கிராம திட்டத்தை உருவாக்க உள்ளார்.

மிகச் சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அந்த மருத்துவ கிராமத்தில் அனைத்துவிதமான இருதய நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு முழுமையான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்கப்படும்.

இந்த மருத்துவ கிராமம் 5 ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும். 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பான மருத்துவ வசதிகள் கொண்டதாக இது உருவாக்கப்படும்.

மேலும் புனர்வாழ்வு மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற மருத்துவ வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும் இங்கு மருத்துவ பல்கலைக்கழகம், ஆராய்ச்சி உயிரினங்கள் கூடம் மற்றும் ஆசிய பசிபிக் உயிர் குழுமத்துடன் இணைந்து உலக தாவரவியல் பூங்கா ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலமாக சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவர். மேலும் இத்திட்டம் வட சென்னை பகுதி அனைத்து விதத்திலும் வளர்ச்சியடையவும் ஊக்கமளிப்பதாக அமையும். ஏனெனில் மேற்கு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை விட வடசென்னை புறநகர் பகுதி குறைந்த வளர்ச்சி அடைந்துள்ளது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.450 கோடி ஆகும். இதற்காக 125 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த மருத்துவ அறிவியல் பூங்காவை சுற்றியுள்ள கிராம மக்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த மருத்துவ சேவை தமிழகத்தின் பின் தங்கிய கிராமங்களுக்கும் சென்றடையும்.

இந்த திட்டத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் டாக்டர் கே.எம். செரியன் மற்றும் டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமசுந்தரம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் திரிபாதி, தொழில் துறைச் செயலர் எம்.எப். பரூக்கி, நிதித்துறை செயலர் ஞானதேசிகன் மற்றும் டிட்கோ செயல் இயக்குனர் குமார் ஜெயந்த் ஆகியோரும் இருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X