For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஆயுதப் போராட்டமாக மாறும் அபாயத்தில் மலேசியப் போராட்டம்'

By Staff
Google Oneindia Tamil News

Malaysia
ஹாங்காங்: மலேசியத் தமிழர்களை தொடர்ந்து அரசு புறக்கணித்து வந்தால், அவர்கள் இலங்கையைப் போல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மலேசியாவின் கெபாங்சன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் பி.ராமசாமி கூறியுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு சிங்கப்பூருக்கான தங்களது அரசியல் விவகாரப் பிரிவுக்கு விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர் ராமசாமி. மலேசிய வாழ் தமிழர்கள் மீதான மலேசிய அரசின் அடக்குமுறையை எதிர்த்து இவர் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தார். அரசையும் விமர்சித்து வந்தார். இதனால் அவரை பதவியிலிருந்து நீக்கி விட்டது மலேசிய அரசு.

தற்போது ஹாங்காங்கில் வசித்து வரும் ராமசாமி, மலேசிய தமிழர்களின் சமீபத்திய போராட்டம் குறித்து கூறுகையில், அமைதி முறையில் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்திக் கொண்டு தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்க மலேசிய அரசு மறுத்தால், தமிழர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால், காந்திப் படங்களுக்குப் பதில் பிரபாகரன் படத்தை ஏந்தத் தமிழர்கள் தயங்க மாட்டார்கள்.

மலேசியத் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரு நாட்டுத் தமிழர்களுமே தங்களது உரிமைகளுக்காகவே போராடி வருகின்றனர்.

தற்போது அமைதியான முறையில் நடந்து வரும் மலேசியத் தமிழர்களின் போராட்டம் விரைவில் போராக வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மலேசிய அரசின் இனவாத நடவடிக்கைகளால் தமிழர்கள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.

இப்போதைக்கு மலேசியத் தமிழர்களிடம் எந்தவித திட்டமும் இல்லை. தங்களது போராட்டத்தை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசிய அரசு தீவிரமாக அமல்படுத்த முயன்றால் நிச்சயம் தமிழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார் ராமசாமி.

மலேசிய பத்திரிக்கையாளர் பரதன் குப்புசாமி கூறுகையில், தற்போது நடந்து வரும் அமைதியான போராட்டம் விரைவில் தீவிரமடையக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

நீண்ட காலமாகவே அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். எனவே இந்த முறை அது தீவிரமடையக் கூடும். ஆயுதப் போராட்டத்தில் மலேசியத் தமிழர்கள் குதிப்பார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மலேசியத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கு மானசீக ஆதரவு தருகின்றனர். இங்குள்ள தமிழ் செய்தித் தாள்கள் பிரபாகரனை வீரனாக சித்தரிக்கின்றன.

இப்போது மலேசியாவில் நடந்து வரும் போராட்டங்களைப் பார்க்கும்போது, மிகுந்த துணிச்சலுடைய தலைவரான உதயக்குமாரின் தலைமையிலான இந்தப் போராட்டம் தீவிரமடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றார் அவர்.

ஆஸி.க்கு இடம் பெயர தமிழர்கள் விருப்பம்:

இதற்கிடையே, மலேசியாவில் அதிகரித்து வரும் பதட்டமான சூழ்நிலையையடுத்து பல தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர விரும்புகின்றனர். இதுதொடர்பான நடைமுறைகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனராம்.

மலேசிய அரசின் பாரபட்சமான போக்கைக் கண்டித்தும், இனவெறி நடவடிக்கையைக் கண்டித்தும் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வாதப் பிரதிவாதங்கள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் மலேசியாவில் போராட்டம் மேலும் தீவிரமடையும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து மலேசியாவிலிருந்து வெளியேற பல தமிழர்கள் விரும்புகின்றனராம். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அவர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பான நடைமுறைகள் குறித்து அவர்கள் பல்வேறு தனியார் இமிக்ரேஷன் நிறுவனங்ளை அணுகி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

குளோபல் மைக்ரேஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் லூயிஸ் லவ்ஸ்டிராண்ட் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் விசாரிப்பு அழைப்புகள் வருகின்றன. எங்களது அலுவலக போன்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

வழக்கமாக எங்களிடம் பேசுவோரில் 15 சதவீதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் இது மும்மடங்காக தற்போது அதிகரித்துள்ளது.

வக்கீல்கள், டாக்டர்கள், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் ஆகியோர்தான் அதிக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர விரும்புகின்றனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X