For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மோடி

By Staff
Google Oneindia Tamil News

Narendhra Modi with Naval Kishore Sharma

அகமதாபாத்: குஜராத் மாநில முதல்வராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் நான்காவது முறையாக பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று பிற்பகல் அவர் பதவியேற்றுக் கொண்டார். சர்தார் படேல் மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வேத மந்திரங்கள் முழங்க முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. அவருக்கு ஆளுநர் நவல் கிஷோர் சர்மா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குஜராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார் மோடி.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிவசேனை தலைவர் மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று மோடியின் குருவும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாள் என்பதால் பாஜகவினர் பெரும் உற்சாகத்துடன் பதவியேற்பு விழாவைக் கண்டுகளித்தனர்.

இன்று மோடி மட்டுமே பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல் முறையாக 1995ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. அப்போது கேஷு பாய் படேல் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 1998ல் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் நரேந்திர மோடி முதல்வராகப் பதவியேற்றார். 2002ல் நடந்த தேர்தலிலும் பாஜகவே வென்று மோடி மீண்டும் முதல்வரானார். இப்போது 4வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. 3வது முறையாக மோடி முதல்வராகியுள்ளார்.

நரேந்திர மோடி - வாழ்க்கைக் குறிப்பு

நரேந்திர பாய் மோடி என்ற இயற்பெயர் கொண்ட மோடி, 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வடக்கு குஜராத்தில் உள்ள வத்நகரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு அம்ரித்பாய், பிரஹலாத்பாய், பங்கஜ்பாய், சோமாபாய் ஆகிய நான்கு சகோதரர்களும் வசந்திபென் என்கிற சகோதரியும் உள்ளனர்.

குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் படித்துள்ள மோடி, 1970ம் ஆண்டு வாக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இளம் சேவகராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

சங் பரிவார் அரசியலிலும், கொள்கைகளிலும் தீவிரமாக இருந்தாலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் எதிர்க்காதவர் மோடி.

தனிப்பட்ட முறையில் விலை உயர்ந்த உடைகளையும், ஆடம்பரமான உடைகளையும்தான் அணிவார் மோடி. இருப்பினும், ஆரம்ப காலத்தில், அமகதபாத் நகரில் உள்ள சரங்பூர் பேருந்து நிலையத்தில் அவரது அண்ணன் வைத்திருந்த டீக் கடையில், மோடியும் கூட மாட உதவி செய்த காலத்தை இப்போதும் குஜராத்திகள் நினைவு கூறுகிறார்கள்.

குஜராத் பாஜகவில் மோடிக்கு எதிரான அதிருப்தித் தலைவர்கள் நிறையப் பேர் உள்ளனர். கேஷுபாய் படேல், சுரேஷ் மேத்தா, கான்ஷிராம் ரானா என பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் மோடியின் தீவிர எதிர்ப்பாளர்கள். ஆனால் நெருப்பலையில் லாவகமாக நீந்தி, குஜராத் மக்களின் ஆதரவுடன் 3வது முறையாக முதல்வர் பொறுப்பில் அமர்ந்து சாதனை படைத்துள்ளார் மோடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X