ராமேஸ்வரம் கோவிலில் பட்டினியால் பலியான மாடுகள்-ஜெ கண்டனம்

Subscribe to Oneindia Tamil


சென்னை: ராமேஸ்வரம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 15 பசு மாடுகள் பட்டினியால் இறந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்தியாவிலேயே புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலுக்கு பசு மாடுகளை பக்தர்கள் தானமாக வழங்குவது வழக்கம். இப்படி தானமாக வழங்கப்படும் பசு மாடுகளை பராமரிக்க கோயிலிலேயே பசுப்பட்டி உள்ளது.

ஆனால், இந்த பசுப்பட்டி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும், சரியான முறையில் பராமரிக்கப்படாததாலும், குறைந்தபட்ச தீனி கூட வழங்காததாலும் பசுக்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.

இறந்த பசு மாடுகளை பரிசோதித்த மருத்துவர் குழு, மாடுகளை எந்தவிதமான நோயும் தாக்கவில்லை என்றும், சத்துக்குறைவு மற்றும் தீவனப்பற்றாக்குறை காரணமாகவே பசுக்கள் இறந்து போயுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 900 மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, பக்தர்கள் பசுக்களை தானமாக கொடுக்கிறார்களே தவிர அவற்றை பராமரிப்பதற்கான செலவுகளை கொடுப்பதில்லை என்று கூறி, மேற்படி பசுக்களின் இறப்பை அவர் நியாயப்படுத்தியிருக்கிறாரே தவிர, பசுக்களின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறவுமில்லை, அதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் இத்தகைய பேச்சும், போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற