ஏழைகளின் நிலங்களை தொடக் கூடாது-ராமதாஸ்
சென்னை: மக்களே தானாக முன்வந்து நிலத்தை கொடுத்தால் தான் வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் 1 சென்ட் விளை நிலத்தைக் கூட வேறு காரியத்துக்கு பயன்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமணநிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
ஒரு காலத்தில் பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்திய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. சம்பளமில்லாத வேலைக்காரியாக நடத்தினர். மனைவி என்ற பட்டம் மட்டுமே இருந்தது. இப்போது பெண்கள் 10,12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.
என் மேல் அரசுக்கு கோபம். கடந்த ஆண்டு 55,000 ஏக்கர் விவசாய நிலங்களை எடுத்து துணை நகரம் அமைக்க அரசு முயற்சித்தபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தினேன்.
அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அந்த இடத்தில் ஒரு ஏக்கர் 1 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை விலைக்கு போகிறது. அரசு நிலத்தை எடுத்திருந்தால் 1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்திருக்கும்.
ஒரு அமைச்சர் கடலூரில் அனல் மின்நிலையம் கொண்டு வர இடம் தேர்வு செய்தார். அதே போல செய்யூரிலும் அனல் மின்நிலைய திட்டம் செயல்படுத்த நிலம் தேர்வு செய்தார்.
அங்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை விலை போகிறது. கடலூரில் ரூ. 50,000 முதல் ரூ. 58,000 வரை விலைக்கு போகிறது. கடலூர் மக்கள் தங்கள் நிலத்தை பாதுகாக்கக் கோரி என்னிடம் ஓடி வந்தனர்.
நான் அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினேன். 1 சென்ட் விளைநிலத்தைக் கூட வேறு காரியத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்றேன். மக்களே கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.
புதிய மாமல்லபுரம், பழைய மாமல்லபுரம் சாலைகளில் பல பண்ணை முதலாளிகள் ஏராளமான நிலங்களை வாங்கி அபகரித்து சொகுசு பங்களாக்களும், பண்ணை வீடுகளும் கட்டியுள்ளனர். அந்த இடங்களை மீட்டு சின்ன, சின்ன நகரங்களை ஏற்படுத்த வேண்டும். ஏழைகளின் நிலங்களை எடுக்கக்கூடாது.
நான் செங்கல்பட்டில் இருந்து திருப்போரூருக்கு வந்தபோது அடர்ந்த காடுகளையும், அழகிய மலைகளையும், இயற்கை வளங்களையும் பார்த்தேன். அந்த இயற்கை வளங்களை உருவாக்க 1 லட்சம் கோடி செலவாகும்.
அதனால்தான் கேட்கிறேன். இயற்கை வளங்களை அழித்துவிட்டு எதற்கு இந்த துணைநகரம். ராமதாஸ் துணை நகர்ததுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று அரசு கூறுகிறது.
ஒரு காலத்தில் செங்கல்பட்டு திருமணி நெல் புகழ் பெற்றது. நானும் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது புதுப்புது ரக நெல்கள் வந்திருக்கிறது. அதோடு புதுப்புது வியாதிகளும் நமக்கு வந்திருக்கின்றன.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் ஒரு முன்னேற்றமும் இல்லை. அது மாறவேண்டும். பாட்டாளி ஆள வேண்டும். வியர்வை சிந்தும் உழைப்பாளிகளை தாங்கும் ஆட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் வளரும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications