For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ் மீது பால் தாக்கரே தாக்கு!

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர அரசியலில் ராஜ் தாக்கரே ஒரு 'கோழி'. மன அழுத்தம் எனும் 'பறவைக் காய்ச்சலால்' அது பாதிக்கப்பட்டு தவித்து வருகிறது. எனவே அதுகுறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என சிவசேனை தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெற்று விளம்பரத்திற்காக ராஜ் தாக்கரே வட இந்தியர்களை பற்றிப் பேசியுள்ளதாக மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியிருப்பதை நான் ஆமோதிக்கிறேன். அரசியலில் அவர் (ராஜ்) ஒரு கோழி. மன அழுத்தம் எனும் பறவைக் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

மராத்தி பேசும் மக்களின் ஒரே குரல் சிவசேனாதான். கடந்த 40 ஆண்டுகளாக மகாராஷ்டிர மக்களுக்கும், சிவசேனா கட்சிக்கும் இடையிலான உறவு, வெறும் அரசியலால் வந்த உறவு அல்ல. மாறாக இது குடும்ப உறவு.

மும்பையின் மீது மராத்தியர்களுக்கே முதல் உரிமை உள்ளது என்பதை சிவசேனா பெற்ற தேர்தல் வெற்றிகள் நிரூபித்தன. ஆனால் இந்தக் குடும்பத்தை (சிவசேனா) விட்டுப் பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மகாராஷ்டிர மக்களின் நலன் குறித்துப் பேசுவது நகைச்சுவைக்குரியது.

அதேசமயம், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்தியர்கள் சென்று வசிக்கலாம், வாழலாம். அதற்கு அரசியல் சட்டத்தில் உரிமை உள்ளது என்று கூறுபவர்கள், உள்ளூர் மக்களை அழித்து விட்டு அதை செய்யக் கூடாது என்பதையும் உணர வேண்டும்.

மும்பையில், மராத்தி பேசும் மக்களுக்கே முதலுரிமை தர வேண்டும் என நாங்கள் வற்புறுத்துகிறோம். அதேசமயம், அதில் நாங்கள் ஜாதி, சமயம், மத பாகுபாட்டைப் பார்ப்பதில்லை. சிவசேனாவின் கொள்கை தெளிவானது. மராத்தி பேசும் மக்கள், மராத்தி மண்ணுக்கும், கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.

மகாராஷ்டிர மக்களாக வசிப்போர், மராத்தி சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மகாராஷ்டிரியர்கள் அல்லாதவர்களை மும்பையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. அதேசமயம், இந்த நகரத்தில் வசிப்பவர்கள், இந்த மாநிலத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும், இந்த மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று மட்டும்தான் நாங்கள் சொல்கிறோம்.

மராத்தி மொழி பேசுவோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என்று சொன்னால் அது அரசியல் சட்டவிரோதமா?.

இந்துத்வா குறித்த எனது நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் அதில் உறுதியாகத்தான் உள்ளேன். இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டில் அதிகரித்தபோது அதைத் தடுத்த நிறுத்த அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்தேன். இதனால் சிலர் கோபமடைந்தனர். வங்கதேசத்திலிருந்து மும்பைக்குள் சட்டவிரோதமாக ஊடுறுவுவோர் குறித்து நான் பேசினால் அதற்கும் சிலர் கோபமடைகிறார்கள்.

நாட்டுக்கு மிரட்டலாக இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்துக்களைத் திரட்ட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதேசமயம், மகாராஷ்டிராவில் மராத்தி பேசும் மக்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். அவர்களின் சுயமரியாதை மதிக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்பதையும் வலியுறுத்தி கூறுகிறேன்.

சிவசேனாவின் இந்தக் கருத்தை, பல காலமாக மும்பையில் வசித்து வருபவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். அப்படியானால் இன்னும் தங்களை வெளி மாநிலத்தவர்களாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X