ஆசிரியர்கள் மிரட்டல்- மாணவர் தற்கொலை: பஸ்கள் சிறைபிடிப்பு
நெல்லை: நாகர்கோவில் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை ஆசிரியர்கள் மிரட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள மெதுகும்மல் வாழப்பள்ளியை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் இதழ்ராஜ். இவர் நாகர்கோவில் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த வாரம் நடந்த கம்யூட்டர் செய்முறை தேர்வில் இதழ்ராஜ் குறைந்த மதிப்பெண்கள் பெற்றார். இது தொடர்பாக நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இதழ்ராஜ் கேட்டுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட துறை தலைவரிடமும் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த ஆசிரியர், இதழ்ராஜை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் பெற்றோரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து இதழ்ராஜ் வீட்டுக்குத் திரும்பினார். மாலை வரை வகுப்புக்கு வராததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அவரது வீட்டுககு போன் செய்தனர். அவர் எடுக்காததால் வீட்டுக்குச் சென்றனர். அவரது அறையை உடைத்து பார்த்தபோது இதழ்ராஜ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
மாணவர் இதழ்ராஜ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நேற்று கல்லூரிக்குப் பரவியது. இதையடுத்து அனைத்து மாணவியரும், போராட்டத்தில் குதித்தனர்.
செய்முறை தேர்வில் மதிப்பெண் குறைத்து போட்டதை கேட்க சென்ற மாணவர் இதழ்ராஜை சம்பந்தப்பட்ட துறை ஆசிரியரும், துறை தலைவரும் தரக்குறைவாக திட்டியதாகவும் இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி மாணவர்கள் கல்லூரி முன் மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு வர வேண்டிய பஸ்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.