For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இயேசு அழைக்கிறார்' நிறுவனர் டிஜிஎஸ் தினகரன் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

Dinakaran Family
சென்னை: பிரபல மத போதகரும் இவான்ஜலிஸ்டுமான டிஜிஎஸ் தினகரன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72. அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இருதய மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு அவர் உயிர் நீத்தார்.

டிஜிஎஸ் தினகரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை உடலுக்கு இறுதி அஞ்சில செலுத்தலாம்.

ஏசு அழைக்கிறார் ஊழியங்கள் அமைப்பை ஏற்படுத்தி மதத் தொண்டாற்றிய தினகரன், கிருஸ்துவின் போதனைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு உலகெங்கும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியவர்.

கோவையில் காருண்யா தொழில்நுட்ப மையத்தையும் தொடங்கினார்.

மறைந்த தினகரனுக்கு மனைவி ஸ்டெல்லா, மகன் பால் தினகரன் ஆகியோர் உள்ளனர்.

தினகரன் மறைவுச் செய்தியை அறிந்ததும் முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு விரைந்தார். தினகரன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பல்துறைப் பிரமுகர்கள், கிறிஸ்தவ போதகர்கள், பிரமுகர்கள், பொது மக்கள் ஏராளமானோர் தினகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயேசு பிரான் குறித்து இவர் பாடிய பல பாடல்களும் வெகு பிரசித்தி பெற்றவை. இவரது ஒரே மகள் ஏஞ்சலின் பல வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தினகரன் வாழ்க்கைக் குறிப்பு:

1935ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டிஜிஎஸ் தினகரன். இளமைக் காலத்தில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் வறுமைதான்.

வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் 1955ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார் தினகரன். தனது ஊருக்கு அருகே ஓடும் ரயில் முன் குதித்து தனது வாழ்க்கைைய முடித்துக் கொள்ள முயன்றார்.

அப்போது அவரது உறவினர் ஒருவர் அவரைத் தடுத்து இயேசு கிறிஸ்துவின் மகிமைகளை அவருக்கு விவரித்தார். அதன் பின்னர் மனமாற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினார் தினகரன்.

பைபிளை தீவிரமாக படிக்க ஆரம்பித்த தினகரன்
1962ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நள்ளிரவு வரை மனதுருக பிரார்த்தனையில் ஈடுபட்டபோது தனக்கு இயேசுவின் தரிசனம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இயேசு அழைக்கிறார் அமைப்பை தொடங்கினார் தினகரன். மத போதனையிலும் ஈடுபடத் தொடங்கினார்.

திருமணத்திற்குப் பின் மனைவி ஸ்டெல்லாவுடன் இணைந்து பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தினார். அவர்களது வழியில் மகன் பால் தினகரனும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்த ஆரம்பித்தார்.

தினகரன் சென்ற இடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவதும் அவரது பிரார்த்தனைகளில் ஏற்படும் உருக்கமும் வெகு பிரசித்தி பெற்றது.

நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ள தினகரன்,
1983ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி 24 இயேசு அழைக்கிறார் சார்பில் 24 மணி நேர ஜெப கோபுரத்தைத் தொடங்கினார் தினகரன்.

1986ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி கோவையில் காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார்.

தினகரின் மறைவு கிறிஸ்தவ சமூதாயத்துக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

கருணாநிதி இரங்கல் செய்தி:

தினகரன் மறைவையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கிறித்தவ மதத்தின் பிரசித்தி பெற்ற போதகர், முனைவர் டி.ஜி.எஸ். தினகரன் திடீரென மறைந்த செய்தி அவரோடு நீண்ட கால நட்பும், தொடர்பும் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியாகும்.

அவருடைய உரைகளைக் கேட்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இன்று அந்த மக்கள் எல்லாம் விம்மியழவும், வேதனையில் மூழ்கவுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டு அவர் மறைந்து விட்டார்.

மறைந்தவர் புகழ் என்றென்றும் நம் உள்ளங்களில் நிறைந்தும், நிலைத்தும் நிற்கும்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், குறிப்பாக அவருடைய செல்வன் பால் தினகரனுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

22ம் தேதி நல்லடக்கம்:

22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கீழ்ப்பாக்கம் மயானத்தில் தினகரனின் உடல் நல்லடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு ஜெபமும் நன்றி அறிவிப்பு கூட்டமும் நடைபெறுகிறது.

வைகோ இரங்கல்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனித நேயப் பண்பாளராக மக்கள் மனமெல்லாம் நிறைந்த சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆறாத்துயரும் அடைந்தேன். வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களுக்கு ஆறுதல் மொழி புகன்ற ஏசு நாதரின் கருணைச் சொற்களைத் தான் செல்லும் இடமெல்லாம் வாக்காக வழங்கி கோடானு கோடி மக்களின் துயர் தணித்து கண்ணீரைத் துடைத்து அருட்பணி ஆற்றி வந்த மாமனிதர்தான் சகோதரர் தினகரன்.

கிறித்துவ மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்துச் சமயத்தினரும் அவரது அருள் வாக்கு கேட்க வெள்ளமாகக் கூடினர். இனிய கானக்குரலில் ஆராதனைப் பாடலும் பாடி, அன்பு கனிய அவர் சொல்லும் உரையால் மனித மனங்களின் சஞ்சலம் நீங்கியது. அமைதி பிறந்தது. வாழ்நாளெல்லாம் உன்னதமான சேவை செய்து வந்த அப்பெருமகனாரின் மறைவுக்கு வேதனை மிகுந்த எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X