மக்கள் சரமாரி அடி-3 போலீஸார் படுகாயம்
மதுரை: திருடர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸாரை, திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் 3 போலீஸாருக்கு படுகாயம் ஏற்பட்டது. திருடர்கள் படு சமயோஜிதமாக பொதுமக்களை திசை திருப்பி விட்டதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் மீது பல கொலை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருமாத்தூரில் இந்த இருவரும் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் 2 தலைமைக் காவலர்கள் மப்டியில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கிளம்பினர்.
கருமாத்தூர் வந்த அவர்கள், அங்குள்ள பஸ் நிலையத்தில் ராஜேந்திரனும், செல்வமும் இருப்பதைப் பார்த்து அவர்களைப் பிடிக்க ஓடினர்.
இதையடுத்து ராஜேந்திரனும், செல்வமும், போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். அப்படியும் விடாத போலீஸார், இருவரையும் பிடிக்க முயன்றனர்.
இந்த சமயத்தில், போலீஸாரிடமிருந்து தப்ப சமயோஜிதமாக யோசித்த இருவரும், தங்களைக் கொல்ல வருகிறார்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.
யாரோ இருவரை, யாரோ மூன்று பேர் சேர்ந்து கொல்ல முயற்சிப்பதாக நினைத்த, கருமாத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த கிராம மக்கள், அந்த 'அப்பாவி'களைக் காப்பாற்ற ஒன்று திரண்டு ஓடி வந்தனர்.
மப்டியில் இருந்த மூன்று போலீஸாரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதை எதிர்பார்க்காத போலீஸார், தாங்கள் போலீஸ் என்று சத்தம் போட்டுள்ளனர். ஆனால் அதைக் கவனிக்காத கருமாத்தூர் மக்கள் சரமாரியாக தர்ம அடி போட்டனர்.
ஊர் ஒன்று கூடி சரமாரியாக தாக்கியதால் 3 போலீஸாரும் தப்பிக்க இயலாமல் கடுமையாக அடி வாங்கினர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
பின்னர் 'அப்பாவிகளான' ராஜேந்திரன், செல்வம் ஆகியோரை ஒரு ஆம்புலன்ஸைப் பிடித்து மருத்துவமனைக்கும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். விசாரணையில் அடி வாங்கியது உண்மையிலேயே அப்பாவிகளான போலீஸார் என்றும், ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ஆம்புலன்ஸைப் பிடிக்க போலீஸார் விரைந்தனர். ஆனால் வழியிலேயே ஆம்புலன்ஸை நிறுத்தி செல்வம் இறங்கி ஓடி விட்டார். ராஜேந்திரனால் ஓட முடியாத அளவுக்கு காயம் பட்டிருந்ததால் அவர் ஓட முயற்சிக்கவில்லை. இதையடுத்து அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவர் இறக்கி விட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம்பட்ட 3 போலீஸாருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீஸாரை பொதுமக்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 6 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.