For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் பிறந்த நாள்-மதுரையில் பிசுபிசு!

By Staff
Google Oneindia Tamil News

MK Stalin
மதுரை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் மதுரையில் மட்டும் பிறந்த நாள் விழா சரிவர கொண்டாடப்படவில்லை.

இதற்கு அழகிரி தரப்பே காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலினின் 56வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர். திருவிழா போல தடபுடலாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.

ஆனால் மதுரையில் மட்டும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. முக்கிய திமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ஸ்டாலின் ஆதரவு திமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், அடுத்த முதல்வர் 'தளபதி' (ஸ்டாலின்) தான் என்று கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில் தமிழகத்தில் அவரது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடினர். ஆனால் மதுரையில் மருந்துக்குக் கூட கொண்டாடவில்லை.

இன்றும் கூட அழகிரி பிறந்த நாளை திமுகவினர் அசத்தலாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், 'தளபதியை' மதுரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றார்.

அழகிரி ஆதரவாளர்கள் நிறைந்த மதுரையில் ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கண்டு கொள்ளவில்லை என்ற போதிலும், மு.க.அழகிரி, ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாராம்.

'கொண்டாடிய' திரையுலகம்!:

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி திரையுலகினர் கலந்து கொண்ட விழா சென்னையில் நடந்தது.

ஸ்டாலின் பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்த சென்னை மேயரும் தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளருமான மா.சுப்பிரமணியன், கலைவாணர் அரங்கில் விழா நடத்தினார்.

கவிக்கோ அப்துல்ரகுமானின் தலைமையில் கவியரங்கத்துடன் விழா தொடங்கியது. சங்கத்தமிழ் பெற்ற புறநானூறு என்ற தலைப்பில் கவிஞர்கள் கபிலன், கருணாநிதி, யுகபாரதி, விவேகா, இளையகம்பன், மணிமேகலை, ருக்மணி, ஆனந்த லட்சுமி ஆகியோர் கவிதை பாடினார்கள்.

இயக்குநர் பாலச்சந்தர் தலைமையில் வாழ்த்தரங்கம் நடந்தது. டைரக்டர் பாரதிராஜா பேசுகையில், மு.க.ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது அவர் எதிரிகளை கூட காயப்படுத்தாத வகையில் வார்த்தைகளை பேசுவதுதான். கோபத்தில் பேசினாலும் அந்த பேச்சில் நாகரீகக் குறைவு இருக்காது. புதிது புதிதாக பல கட்சிகள் தோன்றலாம். பாப்புலாரிட்டி வேறு, அனுபவம் வேறு. அந்த இரண்டும் ஸ்டாலினிடம் உள்ளன.

முதல்வர் கருணாநிதியுடன் பல மேடைகளில் நான் இருந்திருக்கிறேன். கருத்து மோதல் நடத்தியிருக்கிறேன்.ஆனால், கருணாநிதியின் குடும்பம் தமிழின் அடையாளம். எத்தனை வசதிகள் வந்தாலும் தங்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் அவர்கள் என்றார்.

நடிகைகள் மனோரமா, ரேகா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், பாண்டு, ராஜேஷ், பாக்யராஜ், இசை அமைப்பாளர்கள் தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார் ஆகியோரும் பேசினர்.

புஷ்பவனம் குப்புசாமி, கானா உலகநாதன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை பாடல்களாகப் பாடினர்.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X