கர்நாடகத்தை அவமதிப்பு இ-மெயில்-சாஸ்கன் நிறுவனம் மீது தாக்குதல்
பெங்களூர்: பெங்களூர் சாஸ்கன் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் கனடாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கர்நாடகத்தைப் பற்றியும் கர்நாடக கொடியைப் பற்றியும் அவதூறான கவிதை எழுதி அதை இ-மெயில் மூலம் உலவ விட்டதையடுத்து அந்த நிறுவனத்தை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்கி, கம்ப்யூட்டர்களை உடைத்து நொறுக்கினர்.
இதையடுத்து அந்த ஊழியரை சாஸ்கன் நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஹே லி என்பவர் இந்தக் கவிதையை எழுதி அதை மெயில் மூலம் பிறருக்கு அனுப்பினார். இமெயிலில் உலா வந்த இந்த கவிதை குறித்து தகவல் அறிந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூர் தொம்லூர் ரிங் ரோட்டில் உள்ள சாஸ்கன் அலுவலகத்தில் புகுந்து தாக்கினர்.
இதில் பல லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரும் பணியாற்ற மாட்டோம் என மறுத்தனர்.
இதற்கிடையே அந்த ஊழியரை சாஸ்கன் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.