கிருத்திகா புகார்- சரவண பவன் ராஜகோபாலிடம் விசாரணை
சென்னை: சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா கொடுத்துள்ள புகாரின் பேரில் சென்னை போலீஸார் ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி வக்கீலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார் ராஜகோபால்.
சில நாட்களுக்கு முன்பு ராஜகோபால் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், வழக்கறிஞர் ராஜேந்திரன், தனது 2வது மனைவி கிருத்திகாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியிருந்தார்.
அடுத்த நாளே கிருத்திகா வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் அவரது கையில் ஏற்பட்டிருந்த காயத்தையும் காட்டினார். இதுகுறித்த உண்மை விரைவில் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த இரு மனுக்களையும் தி.நகர் துணை ஆணையர் லட்சுமியின் விசாரணைக்கு ஆணையர் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து விசாரணைக்கு வருமாறு லட்சுமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரவண பவன் ராஜகோபால், அவரது ஹோட்டல் மேலாளர்கள் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.
விசாரணையின்போது கிருத்திகா வக்கீல் ராஜேந்திரனிடம் போய் விட்டதாக ராஜகோபால் கூறியுள்ளார். அவர் செய்த தவறுகளை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன். ராஜேந்திரனை விட்டு பிரிந்து வந்தால் ஏற்கவும் தயாராக இருக்கிறேன். இணைந்து வாழவும் தயாராக இருக்கிறேன்.
ராஜேந்திரன் பேச்சைக் கேட்டு என் மீது பொய்யான புகார்களைக் கூறி வருகிறார் கிருத்திகா என்று கூறியுள்ளார் ராஜகோபால்.
இதைத் தொடர்ந்து கிருத்திகாவும் இன்னும் 2 நாட்களில் விசாரணை நடைபெறவுள்ளது.
தனது 2வது மனைவி வக்கீலுடன் சேர்ந்து கொண்டிருப்பதாக சரவண பவன் ராஜகோபால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.