For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக-2, காங்.-2, மார்க்சிஸ்ட்-1: பாமவுக்கு சீட் இல்லை-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிடப் போவதாகவும் பாமகவுக்கு சீட் ஒதுக்கப்படாது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

தமிழக சட்டசபையின் தற்போதைய கட்சிகளின் பலத்தின்படி திமுக கூட்டணி சார்பில் 4 எம்.பிக்களையும், அதிமுக கூட்டணி சார்பில் ஒரு எம்.பியையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முட்யும்.

இன்னொரு ஒரு எம்.பி பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த இடத்தையும் திமுக கூட்டணியால் வெல்ல முடியும்.

இந் நிலையில் தி.மு.க கூட்டணியில் 3 இடங்களை திமுகவும் ஒரு இடத்தை காங்கிரசுக்கும் தர முதல்வர் கருணாநிதி திட்டமிட்டார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடம் கேட்டதால் அந்தக் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுத் தர முடிவு செய்யப்பட்டது.

அதே போல கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசிய சோனியா காந்தி காங்கிரசுக்கு இரு இடங்கள் கோரியுள்ளார். இதையடுத்து திமுக தனக்கு இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்துவிட்டது.

இதையடுத்து இரண்டு இடங்களில் தி.மு.கவும், இரண்டு இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனக்கும் ஒரு எம்பி பதவி வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் தீவிரமாக உள்ளது. ஆனால், இத்தனை காலமாக குடைச்சல் கொடுத்த பாமகவுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துவிட்ட திமுக அதை விட்டுத் தர முன் வரவில்லை.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலங்களவை தேர்தலில் பா.ம.கவிற்கு ஓர் இடம் ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் எனக்கு இரு கடிதங்கள் எழுதியதோடு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை இரு முறை என்னிடம் அனுப்பி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென்றும்,

அப்படி கோருவது அவர்களுடைய உரிமை என்றும், அதை வழங்குவது கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்ற எனது கடமை என்றும்,

அது தான் கூட்டணியின் தர்மம் என்ற நம்பிக்கையில் 7ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு முன் பதில் தர வேண்டுமென்றும் கோரியிருக்கிறார்.

எனவே, இந்த விளக்கத்தினை அவருக்கும், நாட்டிற்கும் தந்திட விரும்புகிறேன்.

2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.கவிற்கு ஓரிடம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அதே போல 2004ம் ஆண்டில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, சட்டமன்றத்தில் தி.மு.கவிற்கு 30 இடங்களும், காங்கிரசுக்கு 25 இடங்களும், பா.ம.கவிற்கு 19 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 இடங்களும் இருந்த நிலையில்,

கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு இடத்தில் தி.மு.க சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்த போதிலும், அவ்வாறு தி.மு.க தனக்கொரு இடத்தை எடுத்து கொள்ளாமல், தனது 30 வாக்குகளையும் பா.ம.க, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வழங்கி, அந்த இரண்டு கட்சிகளின் சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாசும், சுதர்சன நாச்சியப்பனும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட ஒத்துழைத்தது.

டாக்டர் அன்புமணி ராமதாசை அப்போது மாநிலங்களவை உறுப்பினராக, தி.மு.க. வெற்றி பெற செய்ததால்தான் அவர் மத்தியிலே மந்திரியாக முடிந்தது. இன்றளவும் மந்திரியாக நீடிக்க முடிகிறது.

எந்த அளவிற்கு தி.மு.க தன்னுடைய தோழமை கட்சிகளுக்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்தது என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

பா.ம.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி 29.06.2010 வரை மாநிலங்களவை உறுப்பினராக நீடிக்க இயலும். அவருடைய பதவிக்காலம் தற்போது ஒன்றும் முடிந்து விடவில்லை.

மேலும் டாக்டர் ராமதாஸ் கடந்த மாதம் என்னை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, மாநிலங்களவை தேர்தல் குறித்தோ, அதிலே தங்கள் கட்சிக்கு ஓரிடம் வேண்டும் என்றோ கேட்கவே இல்லை.

அது மாத்திரமல்ல, அன்றைய தினமே அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னை சந்தித்தது பற்றியும், பேசியது பற்றியும், விவரித்த நேரத்திலே கூட செய்தியாளர், மாநிலங்களவை தேர்தல் குறித்து முதல்வரிடம் விவாதித்தீர்களா? என்று கேட்டபோது, அது பற்றி எதுவும் பேசவில்லை என்று டாக்டர் ராமதாஸ் விடையளித்ததாகத்தான் அவர்களது தமிழ் ஓசை 22ம் தேதி நாளிதழே குறிப்பிட்டுள்ளது.

இதிலிருந்து இந்த தேர்தலில் பா.ம.கவிற்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கும் எண்ணம் திடீரென்று கடந்த 3ம் தேதி தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.

2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடந்த நேரத்திலே கூட ஒவ்வொரு கட்சியுடனும் உடன்பாடு செய்து கொண்ட போது பா.ம.கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் 31 சட்டமன்ற இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதே தவிர, மாநிலங்களவை எம்பி பதவி அவர்களுக்கு தரப்பட வேண்டும் என்று எந்த குறிப்பும் கிடையாது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று வலியுறுத்திய காரணத்தால், அப்போது அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அடுத்து வரும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் அவர்களுக்கு தருவதாக தி.மு.க. ஒப்புக் கொண்டது.

அந்த வார்த்தையைக் காப்பாற்றிடும் வகையில் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதுவும் தி.மு.க தோழமைக் கட்சியிடம் காட்டிய உறுதிப்பாட்டுக்கான உதாரணம்தான்.

இன்னொரு உதாரணத்தைக் கூடச் சொல்ல முடியும். 1995ம் ஆண்டு மூப்பனார் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1996ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.கவுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தபோது, மூப்பனார் த.மா.கா. என்ற கட்சியைக் கண்டு, தி.மு.கவுடன் உறவு கொண்டு அந்த தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றோம்.

அந்த வெற்றிக்கு பின்னர், மூப்பனார், ஜெயந்தி நடராஜன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் த.மா.காவில் இருந்து கொண்டு காங்கிரஸ் சார்பாக தாங்கள் பெற்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புகளில் நீடிப்பது சரியல்ல என்ற கருத்துடன் 3 பேரும் பசவிகளை ராஜினாமா செய்து விட்டார்கள்.

காலியாகி விட்ட அந்த மூன்று இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் 1997ம் ஆண்டு வந்தபோது, தி.மு.கவே 3 பேரை நிறுத்தி வெற்றி பெறலாம் என்ற நிலைமை இருந்தது.

ஆனால் அந்த எண்ணத்துடன் தி.மு.க நடந்து கொள்ளவில்லை. மாறாக மூப்பனாரிடம் கூறி த.மா.கா. சார்பிலேயே 3 பேரை நிறுத்திக் கொள்ளலாம் என்றும், தி.மு.க ஒருவரைக்கூட நிறுத்தாமல், அந்த 3 பேருக்கும் வாக்களித்து வெற்றிவாய்ப்பைத் தேடித்தரும் என்று கூறி, அந்த தேர்தலில் என்.அப்துல்காதர், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெற்றி பெற வழிவகுத்தது.

இதுவும் தி.மு.க தோழமைக் கட்சிகளிடம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்பதற்கான உதாரணம்தான்.

தற்போது கூட தி.மு.க சட்டப்பேரவையில் 96 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது 6 வாக்குகளையும் தி.மு.க.வுக்கு அளித்தாலே, இந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. 3 உறுப்பினர்களை தன் கட்சியின் சார்பாக அனுப்பிட இயலும்.

ஆனால் அவ்வாறு கூட தி.மு.க. கேட்கவில்லை. தான் இரண்டு இடங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 28 வாக்குகளையும், பா.ம.க. உள்ளிட்ட எஞ்சிய தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஓர் இடத்திலும் போட்டியிடலாம் என்று தான் கூறுகிறோம்.

இந்த நிலையில் 2004ம் ஆண்டு கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்ற பா.ம.க. தற்போது ஓர் இடம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கேட்பது நியாயம் தானா?

டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் கடந்த முறை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவில்லை என்று எழுதியிருந்தார். அப்போது அதற்கான அவசியம் ஏற்படாததால் கூட்டப்படவில்லை.

மேலும், டாக்டர் ராமதாஸ் தன் கடிதத்தில், அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம், எனவே மாநிலங்களவைத் தேர்தலில் கூடுதலாக ஒரு இடம் தாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் கோரப்படுவதைப் போன்று, நாங்களும் கோருவதற்கு எல்லா வகையிலும் உரிமை இருக்கிறது என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று எழுதியிருப்பது எந்த அளவிற்கு தோழமை உணர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றது என்பதை இந்த அறிக்கையினை மீண்டும் ஒருமுறை டாக்டர் ராமதாஸ் படித்தால் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

எனவே, அவர் இந்த தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ராமதாஸ் ஒத்துழைப்பு நல்குவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X