கோவிலை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் உள்ள சிவன் கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் நடராஜர், மாணிக்கவாசகரின் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இத்தனைக்கும் இந்தக் கோவில் போலீஸ் நிலையம் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்ட்ட பிரசித்த பெற்ற கோவில் சோமசுந்தரி அம்மாள் சமேத சோமநாதசுவாமி கோயிலாகும். இது திடுவாடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நேற்று காலை கோயிலில் ஊழியர் ராமரும், பட்டர் ராமசுப்பிரமணியனும் கோயிலுக்கு வந்தபோது இரும்பு கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
இரும்பு கதவை அடுத்த மரக் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சிவன் சன்னதிக்கு வலபுறமிருந்த ஐம்பொன் சிலைகளான மாணிக்கவாசகர் சிலை, இரண்டடி உயரமுள்ள நடராஜர் சிலை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டனர்.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் லயோலா இக்னேஷியஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விரல் ரேகை பிரிவு டிஎஸ்பி விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் பிரமநாயகம், மற்றும் போலீசார் கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு சென்றனர். மோப்ப நாய் டெய்சியும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
அந்த நாய் கோயிலிலிருந்து தூத்துக்குடி ரோட்டில் ஓடி ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் போய் நின்றுவிட்டது.