For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளி்ர் தினம்-கருணாநிதி வாழ்த்து; வெல்க பெண்மை-ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் முன்னேற்றத் திட்டங்களில் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் திமுக அரசு வழிகாட்டியாகத் திகழ்வதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள்.

பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவிறுத்திய சமத்துவ, சம தர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கிணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலைவாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக திமுக அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிடும் வகையில் திகழ்கிறது.

இதற்காக, 1973ம் ஆண்டில் காவல் பணியில் மகளிர் நியமனத் திட்டம், 1989ம் ஆண்டில் மகளிர் மேம்பாட்டுத் திட்டம், 10ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989ம் ஆண்டில் 5 ஆயிரம் ரூபாயும், 1996-ல் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி, 2006ம் ஆண்டில் அதை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்.

1989ம் ஆண்டில் ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்பு திட்டம், 2007ம் ஆண்டில் இத்திட்டம் முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.

1990ம் ஆண்டில் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்.

அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை அளித்திடும் தனிச் சட்டம்.

1996ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்.

2006ம் ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம். எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளதன் மூலம் பெண்கள் சமுதாயம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

பெண்கள் மேலும் ஏற்றம் பெறும் வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் என் உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

வெல்க பெண்மை-ஜெயலலிதா:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில்,

ஆண்டாண்டு காலமாக அடங்கிக் கிடந்த பெண்மை வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

ஆனாலும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களாய் அடக்கு முறையில் வீழ்ந்து கிடக்கிறவர்களாய் இன்னும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வீழ்ச்சியுற்ற தேகத்தில் எழுச்சி வேண்டும்.

விசையொடிந்த உள்ளத்தில் வலிமை வேண்டும்.

புதுமைப் பெண்மை புத்துலகம் படைக்கின்ற திருநாள் விரைவில் வர வேண்டும்.

அந்தப் புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்!

தையலை உயர்வு செய்!

என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்.

உலகப் பெண்மைக்கு என் உளமார்ந்த வாழ்த்து!
தமிழகப் பெண்மைக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்.

வெல்க பெண்மை!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X