ராஜ்யசபா தேர்தல்: தமிழகத்திலிருந்து மொய்லி போட்டி?-பழ.நெடுமாறன் எதிர்ப்பு
சென்னை: கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அனுமதிக்க கூடாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 15ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
இதில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட திமுக கூட்டணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டும் என்று பாமக கோரி வருகிறது. இதுதொடர்பாக திமுக கூட்டணியில் சர்ச்சை நிலவி வருகிறது.
அதிமுக தரப்பில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். எனவே அந்த அணியில் எந்தப் பரபரப்பும் இல்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் இரு வேட்பாளர்களில் ஒருவர் ஜி.கே.வாசன் என்பது உறுதியாகிவிட்டது.
இன்னொரு வேட்பாளர் வீரப்ப மொய்லி என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீரப்ப மொய்லிக்கு சீட் தர வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன் பேரிலேயே காங்கிரஸுக்கு கூடுதலாக ஒரு இடம் ஒதுக்க முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் காங்கிரஸுக்கு இரு இடங்கள் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
''தமிழகத்துக்கு துரோகம் இழைத்த மொய்லி'':
மொய்லி தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்தவர்களில் முக்கியமானவர் வீரப்ப மொய்லி. தமிழர்களுக்கு எதிரான போக்கு கொண்டவர் மொய்லி. அப்படிப்பட்டவர் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது என்பது மிகவும் அநீதியானது. இதை யாரும் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்கவும் முடியாது.
அவரை தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதை தமிழக கட்சிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
ஆனால், மொய்லிக்கு எதிர்ப்பு கிளம்பினால், அதை சமாளிக்க திமுக கூட்டணி தரப்பில் இன்னொரு அஸ்திரம் கையில் உள்ளது. அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கர்நாடகத்திலிருந்துதான் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். எனவே அதை காரணம் காட்டி மொய்லி எதிர்ப்பை சமாளிக்க திமுக கூட்டணி முயலும் எனத் தெரிகிறது.