மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஒக்கு அடி உதை
சிவகங்கை: மணல் கொள்ளையைத் தடுத்த வி.ஏ.ஒ மற்றும் தலையாரிக்கு அடி உதை விழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகே சருகணி ஆற்றில் திருட்டுத்தனமாக டிராக்டரில் சிலர் மணல் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது வி.ஏ.ஒ. சோலை, தலையாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்து மணல் திருட்டை தடுக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வி.ஏ.ஒவையும், தலையாரியையும் தாக்கி விட்டு தப்பி ஒடியது. பின்னர் அவர்கள் விட்டுச் சென்ற டிராக்டரை தேவகோட்டைக்கு எடுத்து சென்று கொண்டிருந்தபோது, வி.ஏ.ஒ. சோலை, ராதாகிருஷ்ணன் ஆகியோரை அக் கும்பல் மீண்டும் தாக்கிவிட்டு ஓடியது.
தகவலறிந்த தாசில்தார் ராஜேஸ்வரி, திருவேகம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், எஸ்ஐ தாரேஸ் அகமது ஆகியோர் சம்பவம் இடத்திற்கு சென்று வி.ஏ.ஒ. சோலை, ராமகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சின்னையா, மற்றும் கணேசன், முருகன் ஆகியோர் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்திரவிட்டார்.