ராமதாஸ் அந்தர் பல்டி-திமுக கூட்டணிக்கே ஓட்டு

தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக கூட்டணி ஐந்து இடங்களில் வெற்றி பெற முடியும். அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்கும்.
இதையடுத்து திமுக தான் இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. ஆனால் பாமக தனக்கு ஒரு சீட் வேண்டும் என்று கேட்டது. இதை திமுக நிராகரித்தது. மார்ச் 15ம் தேதிக்குள் முடிவு சொல்லுமாறு கெடு விதித்தார் ராமதாஸ். ஆனால் அதை திமுக பொருட்படுத்தாமல் வேட்பாளர்களை அறிவித்து, அவர்களும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் சோனியாவின் தூதர் அகமது படேல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியிடம் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில், பாமகவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய கடந்த 2 நாட்களாக பாமக தரப்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை முடிவு அறிவிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதையும் கூறவில்லை. பின்னர் மாலையில் தெரிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறினார். அன்றும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
நேற்று காலையாவது அறிவிப்பு வெளியாகும் என பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாக்டர் ராமதாஸ் நேரடியாக செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
இப்படியாக கடந்த 2 நாட்களாக பாமக தலைவர்கள் நடத்தி வந்த தீவிர ஆலோசனைக்குப் பின்னர், கட்சித் தலைவர் ஜி.கே.மணி நேற்று இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், திமுக கூட்டணியில், மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு கேட்டோம். ஆனால் அளிக்கப்படாதது வருத்தம் தருகிறது. அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும். எனவே தேர்தல் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் அகமது படேல் உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதைப் புறக்கணிக்க முடியாத நிலையில் பாமக உள்ளது. எனவே தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு உதவ, பாமக சட்டசபை உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் ஜி.கே.மணி.
பாமக இந்த முடிவைத்தான் எடுக்கும் என அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காரணம், பாமகவுக்கு வேறு மாதிரியான முடிவு எடுக்கும் அளவுக்கு சூழ்நிலை உருவாகவில்லை என்பதால் இந்த முடிவைத் தவிர வேறு முடிவை பாமக எடுக்காது என்றே திமுக கூட்டணித் தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது.
பாமக தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதன் மூலம் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த சலசலப்பு அடங்கியுள்ளது.
2வது சறுக்கல்:
சமீபத்திய அரசியலில் பாமக சந்தித்துள்ள 2வது பெரிய சறுக்கல் இது. மணல் திருட்டு, பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை, மது விலக்கு உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகள் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார் டாக்டர் ராமதாஸ்.
இரு கட்சியினருக்கும் இடையே கடும் அறிக்கைப் போர்களும், வாத, பிரதிவாதங்களும் நடந்து வந்த நிலையில் தடாலடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார் டாக்டர் ராமதாஸ். இது பாமகவுக்கு பெரும் சரிவாக கருதப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சீட் கிடைக்காது என்று தெரிந்தும் கூட, ஒரு சீட் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி கடைசியில் திமுக கூட்டணிக்கே ஆதரவு என்ற நிலையை ராமதாஸ் எடுத்திருப்பது 2வது சறுக்கலாக கருதப்படுகிறது.