For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூளை சிதைவு நோய் சிகிச்சை-ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அரிய சாதனை

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி: மரபணு மாற்றங்கள் மூலம் மூளை சிதைவு நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையில் அரிய சாதனையை ஜப்பான் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.

'ஸ்பைனோசெரிபெலார் அடாக்சியா' என்ற அபூர்வ வகை நரம்புத் தளர்ச்சி நோய் உள்ளது. மூளை செல்களைப் படிப்படியாக சேதப்படுத்தி மரணத்தை தரக்கூடிய இந்த கொடிய நோய் பரம்பரையாக ஏற்படக்கூடியது.

உடல் இயக்கத்தில் தடுமாற்றம், பேச்சு குளறுதல், தெளிவற்ற பார்வை, உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும்.

சிறுபிள்ளைப் பருவம் முடியும் போது அல்லது வாலிபப் பருவத் தொடக்கத்திலேயே இந்த நோயின் அறிகுறிகள் தொடங்கிவிடும். படிப்படியாக நிலைமை மோசமாகி இறுதியில் மரணத்தில் கொண்டுவிட்டுவிடும். மருத்துவ உலகில் இந்த நோய்க்குத் தீர்வே இல்லை.

இந்த நோய் பற்றி இங்கிலாந்து நாட்டின் நியூ கேஸில் பல்கலைக்கழக பேராசிரியரும் நரம்பியல் மரபணுத்துறை நிபுணருமான பேட்ரிக் சின்றி கூறுகையில்,

"ஸ்பைனோசெரிபெலார் அடாக்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் சிரமங்கள் கொடுமையானது. மது அருந்தியவர்கள் அதன் போதையை அனுபவிக்க முடியாமல் தலைக்கிறுக்கு பிடித்து ஆடும்நிலைதான் கிட்டத்தட்ட இந்த நோயாளிகளுக்கு ஏற்படும்.

அவர்களால் சுயமாக சாப்பிட முடியாது. துணிமணிகளைத் துவைக்க இயலாது. ஒருகட்டத்தில் வீல்சேர்களில் அமர்ந்தபடி வாழ்க்கையைக் கழிக்க நேரிடும்.


பாதிக்கப்பட்டவர்களின் மனதைத் தேற்றுவதுதான் அவர்களுக்கு நாம் தரும் ஒரே ஆறுதல். சிகிச்சையைப் பொறுத்தவரை நோயை அறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தில் வேறு யாருக்காவது இந்த நோய் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதைத் தெரிவிப்போம்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பராமரிப்பு வழிமுறைகளை அவர்களது குடும்பத்தாருக்கு அறிவுறுத்துவோம்.

ஸ்பைனோசெரிபெலார் அடாக்சியா என்பது ஹன்டிங்டன் நோய் போன்ற மூளை சிதைவு நோய் வகைகளைச் சேர்ந்தது. படிப்படியாக தொடங்கி மூளையை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் இந்த வகை நோய்களுக்கெல்லாம் சிகிச்சை, மேலே சொன்னபடியான பராமரிப்பு முறைகள் மட்டுமே.

இங்கிலாந்தில் 5000 பேரில் ஒருவருக்கு மூளை சிதைவு நோய் உள்ளது. இதில் பல வகைகள் இருந்தாலும், ஒவ்வொருவரின் மரபணுவில் ஏற்படும் வெவ்வேறு வகையான சிதைவுகளினால்தான் இந்த நோய்கள் உண்டாகின்றன" என்றார்.

இப்படிப்பட்ட கொடுமையான நோய்க்கான சிகிச்சையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஜப்பான் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இப்போது புதிய சாதனையைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட ஓர் எச்ஐவி வைரஸை மூளை சிதைவு பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலப் பகுதியில் சோதனை முறையாக இந்த ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர்.

அங்கு வைரஸ் பரவியபோது ஒருவகை புதிய மரபணுக்கூறு உருவானது. இந்த மரபணுக்கூறு, மூளை சிதைவு நோய் அறிகுறியை உண்டாக்கும் மரபணுக்கோளாறைக் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டது.

ஆனால் இந்த சோதனை முயற்சி எலிகளிடம்தான் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், "எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், நோய் பாதிப்பினால் ஒழுங்கற்று இருந்த நடமாட்டத்தில், சிகிச்சைக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் தெரிந்தது. எனவே இந்த மரபணு சிகிச்சை முறைக்கு மனிதர்களிடமும் நல்ல பலன் தெரியும்" என்று ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X