For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்கங்கள் '90'-பலன் '0': ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக பட்ஜெட் அறிக்கையின் பக்கங்கள் தான் '90'. ஆனால், அதனால் மக்களுக்குக் கிடைக்கப் போகும் பலனோ வெறும் '0' தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2008-2009ம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்பு.

விண்ணைத் தொட்டுவிட்ட விலைவாசி உயர்வுக்கு என்ன பரிகாரம் என்பதைக் காணாமல், அப்படிக் காணவும் நினைக்காமல், வார்த்தை விளையாட்டை நிதி நிலை அறிக்கை என்ற பெயரில் நிகழ்த்தி இருக்கிறது திமுக அரசு.

புதிய மின் உற்பத்தித் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இன்றைக்கு இருளில் மூழ்கிக் கிடக்கிறதே தமிழ் நாடு? இதற்கு வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்கு என்ன முயற்சி எடுக்கப்படுகிறது என்று நிதிநிலை அறிக்கையில் ஏதும் சொல்லவில்லையே ஏன்?

திமுக அரசு, ஆண்டுக்குப் பல மெகா அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வழங்கத் தவறுவதில்லை. ஆனால், அறிவிப்புக்கு ஓர் ஆண்டு, ஆய்வுக்கு ஓர் ஆண்டு, இடத்தைத் தேர்வு செய்ய ஓர் ஆண்டு, நிதியைப் பெறும் முயற்சிக்கு ஓர் ஆண்டு, அந்த நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு ஓர் ஆண்டு என்று ஆண்டுக்கணக்கில் காலத்தை நீட்டிக் கொண்டிருப்பதால்,

இந்த ஆட்சியின் ஆயுட் காலத்திற்குள் எந்தத் திட்டமும் நிறைவேறப் போவதில்லை என்பது தான் நிதர்சனமான நிலை.

மெட்ரோ ரயில், நவீன மாநில நூலகம் போன்ற பல திட்டங்களுக்கு இந்தக் கதி தான் ஏற்படும் என்பதற்கு அதிக ஆராய்ச்சி தேவையில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க நடவடிக்கை இல்லை; தடையில்லா மின்சாரம் வழங்க எந்த ஏற்பாடும் இல்லை; உரத் தட்டுப்பாட்டுக்கும், விதைத் தட்டுப்பாட்டுக்கும் விமோட்சணம் இல்லை; விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உத்தரவாதமும் இல்லை; குவிண்டால் நெல்லுக்கு 1,000 ரூபாய் வழங்கிட வழியுமில்லை; கண்ணீரில் மிதக்கும் கரும்பு விவசாயிகளைக் காக்கத் திட்டங்கள் ஏதும் கைவசம் இல்லை;
விவசாயிகளைக் காக்க நான் கொண்டு வந்த உழவர் பாதுகாப்புத் திட்டமும் இப்போது நடைமுறையில் இல்லை.

முதல்வர் கருணாநிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெந்துயரில் கருகிக் கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்? இனிமேல் என்ன செய்யப் போகிறார்? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அது போல, நெசவாளர்கள் துயர் துடைக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும் எந்தத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கடன் தள்ளுபடி குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. இதனால் மீனவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.

நிதிநிலை அறிக்கையின் பக்கங்கள் தான் 90! ஆனால், அதனால் மக்களுக்குக் கிடைக்கப் போகும் பலனோ பூஜ்ஜியம் தான் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

சுதர்சனம், சட்டசபை காங்கிரஸ் தலைவர்:

இந்த பட்ஜெட் தேனில் ஊற வைத்து பலாச்சுளை போல உள்ளது. விவசாயிகளை முன்னிலைப்படுத்தி இந்த பட்ஜெட்டில் அவர்களது நலன் காக்க பல சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நதி நீர் இணைப்பு, விவசாயக் கருவிகள் வாங்க மானியம், மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழு போல, விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழு, நிலத்தடி நீர் பாதுகாப்புக்காக தடுப்பணை கட்டும் திட்டம் போன்றவையும் விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்தும்.

வரதராஜன், சிபிஎம்:

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்கப்படக் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை தொடங்கவிருப்பது குறித்த அறிவிப்பை வரவேற்கிறோம். அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து, உணவுப் படியில் ரூ. 50 உயர்வு, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு போன்றவை வரவேற்புக்குரியது.

சிவபுண்ணியம், சிபிஐ:

பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரவேற்புக்குரியது. பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான வழி வகைகள் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நல வாரியங்களை அந்தந்த துறையின் கீழ் செயல்பட விடாமல், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார் சிவபுண்ணியம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X