பரிமளம் தற்கொலை: சோகத்தில் திராவிட கட்சிகள்
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நெருங்கும் வேளையில் அவரது வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் திராவிடக் கட்சிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
திமுகவை தோற்றுவித்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு வழிகோலியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழகத்தில் உள்ள திராவிடப் பாரம்பரிய கட்சிகளும், இயக்கங்களும் அவரது வழித்தோன்றலாகவே தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றன.
அடுத்தாண்டு வரும் அவரது பிறந்தநாள் நூற்றாண்டை வெகு விமரிசையாக நடத்துவது பற்றி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பல முஸ்தீபுகளை செய்து வருகின்றன.
2009ம் ஆண்டு முழுவதும் உலகையே பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டை அரசு சார்பில் கொண்டாடப் போவதாக பட்ஜெட் அறிக்கையிலேயே ஆளும் திமுக அரசு அறிவித்தது.
"ஆட்சிப் பொறுப்பை இரண்டு ஆண்டுகள் மட்டுமே அண்ணா வகித்தபோதும், ஜனநாயகத்தின் மாட்சிமையை உலகுக்கு உணர்த்துவதாக அவரது நிர்வாகம் இருந்தது. அண்ணாவின் பெருமையை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும்விதமாக இந்த விழாக்கள் நடத்தப்படும்" என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதற்கு சற்றும் குறையாத வகையில், அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டை அதிவிமரிசையாக கொண்டாடப் போவதாக கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்தார்.
இருதரப்பினரும் வரிந்துகட்டிக் கொண்டு விழா எடுக்க மும்முரம் காட்டும் நிலையில் அண்ணா குடும்பத்தில் இந்த சோக நிகழ்ச்சி நடந்துள்ளது.
அவரது வளர்ப்புமகன் பரிமளம் கடன்சுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பரிமளத்தின் மறைவு இரு பெரும் திராவிட கட்சித் தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள இரங்கற்பாவில், 'நம்மை வளர்த்து இன்றைக்கு ஆளாக்கிய அண்ணாவின் மூச்சும், ஆவியும், இதயத்துடிப்பும் என்றும் நம்மிடம் நிலைத்திருக்கும். அவரது பெருமையை பறைசாற்றுவதற்கு பிரம்மாண்டமான விழா எடுக்கவுள்ள நிலையில் பரிமளத்தின் இறப்பு மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை அரசுடைமையாக்கி அதற்கான நிதியை அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் கருணாநிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்தக் குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் தான் இருந்து வருகிறது.