• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் பதவிக்கு பிரகாஷ் காரத்?

By Staff
|

Karat
கோவை: இடதுசாரிகள் திட்டமிட்டுள்ள 3வது அணி திட்டமிட்டபடி அமைந்து, அந்த அணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்தால், பிரதமராக பிரகாஷ் காரத் பதவியேற்பார் என கோவையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் தொண்டர்களும், பிற தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

கொங்கு மாநகரான கோவை, செங்கொடி நகராக மாறியுள்ளது. கோவையில் தொடங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 நாள் 19வது தேசிய மாநாட்டையொட்டி அங்கு செஞ்சட்டைத் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

அகில இந்திய அளவில் தொண்டர்களும் தலைவர்களும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் குவிந்துள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தொண்டர்களிடையே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஎம் முயற்சியில் உருவாகும் 3வது அணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும், 3வது அணிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கோவை மாநாட்டில் பிரகாஷ் காரத்துக்கு வைக்கப்பட்டுள்ள கட் அவுட்களின் எண்ணிக்கையும், காரத்துக்கு கட்சியினரிடையே நிலவும் ஏகோபித்த வரவேற்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு சிபிஎம் தலைவருக்கு இப்போதுதான் முதல் முறையாக இந்த அளவுக்கு கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன என்று ஒரு தொண்டர் கூறுகிறார். கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்சி புரிந்த ஜோதி பாசுவுக்குக் கூட இப்படி கட் அவுட் வைக்கப்பட்டதில்லை என்றார் அவர்.

கோவை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பெரும்பாலான தொண்டர்களும், பிரகாஷ் காரத்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற கருத்துடன இருப்பதைக் காண முடிந்தது.

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பிரகாஷ் காரத் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து ஆதரவு தருவார்கள்.

மேலும், கேரளாவில் இரு பெரும் பிரிவுகளாக செயல்பட்டு வரும் அச்சுதானந்தனும், பினரயி விஜயன் ஆகிய இருவரும் ஒன்றாக செயல்பட்டு ஆதரவு தருவார்கள். கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவது எந்த வகையிலும் தடைபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் இரு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் காரத் பிரதமராக ஆதரவாக இருப்பார்கள் என்றும் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நான்காவது முறை திரிபுரா முதல்வராகியுள்ள மாணிக் சர்க்காரும் பிரகாஷ் காரத்துக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

இடதுசாரிகள் அமைக்கப் போகிற 3வது அணியில், தமிழகத்தில் திமுகவும், ஆந்திராவில் தெலுங்கு தேசமும் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் மூலம் 3வது அணிக்கு நிச்சயம் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிபிஎம் உள்ளது.

வட இந்திய பிராந்தியக் கட்சிகளை விட தென்னகத்து பிராந்தியக் கட்சிகள்தான் ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தைக் கொடுக்கும் என்பதால் தென்னகத்தின் மீது சிபிஎம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

மத்தியில் 103 சீட்கள் சிபிஎம்முக்குக் கிடைத்தால் நிச்சயம், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையும் சிபிஎம் தொண்டர்களிடையே காணப்படுகிறது.

ஆனால் தொண்டர்களின் எண்ணம் பலிக்குமா, கட்சி பிரகாஷ் காரத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எச்சூரி எச்சரிக்கை

இதற்கிடையே, நேற்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 3வது அணி அமைவது உறுதி. இந்த அணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து செயல்படும்.

மதச்சார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே சிபிஎம் கூட்டணி அமைக்கும். மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

அதேபோல அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகளைப் போலவே மற்ற மதச்சார்பற்ற சக்திகளும், தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும்.

விலைவாசி உயர்வை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டத்தை நடத்தும் என்றார் எச்சூரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X