ஜூலைக்குள் 25,000 கிராமங்களில் பிராட்பேண்ட்: பி.எஸ்.என்.எல்
பெங்களூர்: ஜூலை மாதத்திற்குள் 25 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.
நோக்கியா சீமன்ஸ் நெட்ஒர்க்ஸ் (என்.எஸ்.என்) வழங்கும் புதிய கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது பி.எஸ்.என்.எல்.
என்.எஸ்.என்னின் மல்டிபிளே சொல்யூஷன்ஸ் மூலம் குறைந்த செலவில் அதி வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும். இதன் மூலம் தனியார் சேவையாளர்களின் போட்டியை வெகுவாக குறைக்க முடியும் என பி.எஸ்.என்.எல் கூறுகிறது.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் சமுதாய சேவை மையங்களையும் இணைக்க முடியும். இதுதவிர இ-ஆளுமை சேவையையும் அதிகரிக்க முடியும்.
இதுகுரித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் கூறுகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவை மூலம், ஊரக பிராட்பேண்ட் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 25 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த முடியும். கிராமப்புறங்களில் விரைவான இன்டர்நெட் சேவையை ஏற்படுத்த முடியும் என்றார்.
தற்போது இந்தியாவில் 30.4 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. இதில் 10.7 லட்சம் இணைப்புகளை பி.எஸ்.என்.எல். கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.