• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்துத்வா' சக்திகளை ஒடுக்க தவறிய மத்திய அரசு-காரத்

By Staff
|

கோவை: நாட்டில் இந்துத்துவா சக்திகள் மீண்டும் தலை தூக்கியுள்ளதை தடுக்க மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வி அடைந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டிற்கு இடையே பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை மீண்டும் மதவாதத்தை கையில் எடுத்துள்ளன. இந்துத்வாவை ஆயுதமாகக் கொண்டு அவை செயல்பட ஆரம்பித்துள்ளன. இதைத் தடுக்க காங்கிரஸ் கூட்டணி அரசு தவறி விட்டது, தோல்வி அடைந்து விட்டது.

மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மதவாத சக்திகளுக்கு எதிராக மெத்தனப் போக்குடன் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்துத்வா சக்திகளை முறியடிக்க முடியாமல் திணறுவது வருத்தத்திற்குரியது. அவற்றுக்கு எதிராக அலட்சிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு.

மதக் கலவரங்கள், மதவாத செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறி விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உரிய இழப்பீடும், மறுவாழ்வும் சரிவர கிடைக்கவில்லை.

மகாராஷ்டிராவில் 1992-93ல் நடந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க மகாராஷ்டிராவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோைல குஜராத் வன்முறை வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மத்திய அரசு தவறி விட்டது.

மதக் கலவரங்களைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். ஆனால் அதுதொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எதையும் எடுக்காமல் உள்ளது.

இதேபோல முஸ்லீம் சமுதாயத்தினர் மீது அரசு உரிய அக்கறையுடன் இல்லை என்பதை சச்சார் கமிட்டி பரிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன. நாட்டில் உள்ள முஸ்லீம்களின் இன்றைய நிலைக்கு காங்கிரஸ் கூட்டணி அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றார் காரத்.

அரசியல் தீர்மானம் நிறைவேறியது:

முன்னதாக மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய ஆட்சியாளர்களின் நாசகர தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு, மதவெறி சக்திகளை தனிமைப்படுத்துவது, ஏகாதிபத்திய எதிர்ப்புடன் சுதந்திர வெளியுறவுக் கொள்கை, ஒடுக்கப்பட்ட தலித், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மலைவாழ் மக்கள் நலன்களை பாதுகாக்கும் சமூக சாசனம் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையிலான அரசியல் தீர்மானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 19வது மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டின் மூன்றாவது நாளான திங்கட்கிழமை மாலை இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது கடந்த இரண்டு நாட்களாக ஆழமான விவாதங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 41 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வரைவுத் தீர்மானத்தின் பொதுவான திசைவழியையும், நிலைபாட்டையும் மாநாட்டில் பிரதிநிதிகள் அங்கீகரித்தனர்.அரசியல் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு திங்கட்கிழமை பிற்பகல் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தொகுப்புரை வழங்கினார்.

இதையடுத்து இந்த தீர்மானம் பலத்த கரவொலிக்கு இடையே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசியல் தீர்மானத்துக்கு மாற்று ஆலோசனையோ, மாற்று வழி முறையோ இதில் முன்வரவில்லை என்று பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X