திருவிழாவுக்கு வந்த பெண் யானை திடீர் சாவு
ஆறுமுகநேரி: கோயில் விழாவுக்கு வந்த பெண் யானை திடீரென்று இறந்தது. பொதுமக்கள் இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான பெண் யானை சுமா (40). தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் பங்கேற்க 2 வாரங்களுக்கு முன் சுமா சென்றது.
யானை சுமா காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடந்து சென்றபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தது.
அதிர்ச்சியடைந்த பாகன், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருச்செந்தூர் மாவட்ட வன சரகர் மாரிமுத்து முன்னிலையில் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானை சுமா இறந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் யானை அடக்கம் செய்யப்பட்டது.