தமிழர் எதிர்ப்பு கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டாம்-பெங்களூர் தமிழ்ச் சங்கம் தீர்மானம்
பெங்களூர்: தமிழையும் தமிழர்களையும் எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு கர்நாடக தமிழர்கள் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று தமிழ் சஙகம் கோரியுள்ளது.
தமிழக அரசின் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபட்டன. தமிழ்ச் சங்கம், பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழ் சினிமாக்களை ஓட விடாமல் தடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழர்கள் அரசியல்ரீதியில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்க நேற்று தமிழ்ச் சங்கத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் அமைப்புகள் கலந்து கொண்டன. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
கடந்த 1991ம் ஆண்டு கர்நாடகாவில் முதல்வராக இருந்த பங்காரப்பா தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் குடும்பங்களில் உயிரிழப்பும், உடமைகள், மான இழப்பும் ஏற்பட்டது. ஆனால் அதறகான எதிர்விளைவை தமிழகத்தில் யாரும் செய்யவில்லை.
ஆனால் கன்னட அமைப்புகள் அவர்களை தலைவர்களாகக் காட்டிக்கொண்டு காவிரி நீர், ஓகேனக்கல் குடிநீர் என்று ஏதாவது பிரச்னையை எடுத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதும், தமிழர்களை எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இதை தேசிய கட்சிகளின் மூத்த அரசியல் தலைவர்கள், நடுநிலையாளர்கள், ஆன்மீக தலைவர்கள் யாருமே கண்டு கொள்வதில்லை.
காவல்துறையும் கன்னட அமைப்புகளுக்கு காவலிருப்பது போல நடந்து கொள்கிறது.
தற்போதைய தாக்குதலுக்கு தமிழக அரசும், தோழமை கட்சிகளும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் , கலைஞர்களும் ஒன்று திரண்டு கர்நாடக தமிழர்களின் பாதுகாப்புக்கு துணை புரிந்தனர். தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
சாலையில் இறங்கி போராட முன் வந்த தென்னிந்திய தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தினருக்கு தமிழ்சங்கமும், அனைத்து தமிழ் அமைப்புகளும் நன்றி தெரிவிக்கிறோம்.
வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக முதல்வரின் அறிவிப்பை ஏற்று தமிழர்-கன்னடர் நல்லுறவை கருத்தில் கொண்டு தமிழ்சங்கம் முன் நின்று நடத்த இருந்த அறப் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழ் தமிழர்களை எதிர்க்கும் அரசியல் கட்சிக்கு கர்நாடக வாழ் தமிழர்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.