சென்னையில் போலீஸ் சுட்டு 2 தூத்துக்குடி ரவுடிகள் பலி
சென்னை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருவரை சென்னையில் வைத்து தூத்துக்குடி போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். அப்பகுதியில் பயங்கர ரவுடி ஆவார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது கூட்டாளி சுடலைமணி. இவரும் பயங்கர ரவுடி ஆவார். இவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு சென்னை ராயப்பேட்டையில் பெட்ரோல் பங்க் அதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கு ஜெயக்குமார் மீது இருந்தது.
இருவரும் தலைமறைவாகஇருந்து வந்தனர். அவர்களை தூத்துக்குடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ெஜயக்குமாரும், சுடலைமணியும் சென்னை அயனாவரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தூத்துக்குடி போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து தூத்துக்குடியிலிருந்து தனிப்படை போலீஸார் சென்னைக்கு விரைந்து வந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் அயனாவரம் பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது மயிலம் சிவமணி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் முற்றுகையிட்டனர். உள்ளே இருந்த இருவரையும் சரணடைந்து விடும்படி போலீஸார் உத்தரவிட்டனர்.
ஆனால் அவர்கள் போலீஸாரை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றதாக ெதரிகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் இருவரையும் சுட்டனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
காலையில் நடந்த இந்த என்கெளன்டரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.