தேனி வனப்பகுதிகளில் மீண்டும் நக்சல் வேட்டை
பெரியகுளம்: தேனி மாவட்ட வனப் பகுதிகளில் மீண்டும் நக்சலைட் வேட்டையில் அதிரடிப்படை போலீஸார் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், நடத்திய வேட்டையில், வேல்முருகன், பழனிவேல், முத்து செல்வம் ஆகிய 3 நக்சலைட்டுகள் பிடிபட்டனர்.
தப்பி ஓடிய மற்ற சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனி வனப்பகுதிகளை நக்சலைட் முகாமாக மாற்ற நடந்து வரும் முயற்சிகள் தெரிய வந்தன.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு மலைப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாத கும்பலை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத் தனர். அப்போது அந்த தீவிரவாதிகள் எதிர்தாக்கு தல் நடத்தினர். இதையடுத்து போலீசாருக்கும், தீவிர வாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பயங்கர ஆயுதங் களுடன் 5 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தேனி வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளை முழுமையாக ஒடுக்கும் வகையில் அதிரடிப்படை சிறப்பு முகாம் பெரியகுளம் அருகே கும்பக்கரை, கொடைக்கானல், பெரியகுளம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டது.
இங்குள்ள அதிரடிப்படை வீரர்கள், தேனி மாவட்ட போலீஸார் அவ்வப்போது வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் இந்த முகாம்களில் இருந்த அதிரடிப்படை வீரர்கள், மீண்டும் சத்தியமங்கலம் சென்று விட்டனர். ஒரு சிலரே தேனி முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பெரியகுளம் மலைப்பகுதி யில் மீண்டும் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேனி மாவட்ட எஸ்.பி. சுதாகர், மதுரை ஊரக மாவட்ட எஸ்.பி. அன்பு ஆகியோர் விரைந்தனர்.
அதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறப்பு முகாம்கள் காலி செய்யப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் மீண்டும் பெரியகுளம் மலைப்பகுதிக்குள் துணிச்சலுடன் ஊடுருவி இருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
இதையடுத்து இப்பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.