For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகாரப் பகிர்வு கானல் நீர்-தமிழீழமே தீர்வு: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

ஓஸ்லோ: இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்று ராஜபக்சே கூறுவது ஒரு கானல் நீர் போலாகும். தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு, நிரந்தர தீர்வு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நார்வே சென்றிருந்த வைகோ அங்கு ஈழத் தமிழர்கள் மத்தியில் பேசினார். அப்போது வைகோ கூறுகையில், ஐரோப்பாக் கண்டத்தில் நான் எங்கும் கால் வைத்துவிடக்கூடாது என்று சிங்கள அரசு கவனமாக இருக்கும் நிலையில் நார்வேயின் எல்லைக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்தது.

ஓஸ்லோவில் நடைபெற்ற "தெற்காசியாவில் அமைதியும் சமாதானமும்" மாநாடு தொடர்பாக வாழும் கலை ரவிசங்கரின் பிரதிநிதிகள் என்னிடம் பேசியபோது இலங்கைத் தரப்பில் கொலைவெறி பிடித்த ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவினரைத் தவிர யார் வேண்டுமானாலும் வரட்டும் என்று கூறியிருந்தேன்.

அப்போது அவர்களின் பட்டியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

10 மற்றும் 11ஆகிய நாட்களில் மாநாடு நடைபெறும் நிலையில் 8ம் தேதி இரவு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

அதன் பின்னர் நார்வே அரசாங்கத்துடன் வாழும் கலை ரவிசங்கர் தரப்பைச் சேர்ந்தோர் தொடர்பு கொண்டு நிலைமையைத் தெரிவிக்க மறுநாள் காலையில் டெலியில் உள்ள நார்வே தூதரகத்தில் விசா கோரப்பட்டது.

அப்போது என்னைத் தொடர்பு கொண்டு பேசிய நார்வே தூதரக தலைமை அதிகாரி, ஜெர்மனி வழியாக நீங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மாற்றுப் பாதை வழியாக செல்லுங்கள் என்றார்.

இதையடுத்து பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ் வழியாக நார்வே வந்து சேர்ந்தேன்.

மாநாட்டில் பேசுகையில் சுவீடனிலிருந்து நார்வே பிரிந்ததை சுட்டிக் காட்டினேன். 100ஆண்டுகளுக்கு முன்னர் மே 17ம் நாள் நார்வே பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை மன்னர் மாளிகை முன்னர் இதே மக்கள் கொண்டாடினீர்களே என்றேன். அரங்கம் சிலிர்த்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் பயங்கரவாதிகள் என்று கூறி கண்டனம் தெரிவிக்க வந்து விடுகின்றனர்.

இந்த உலகில் எந்த ஒரு நாடும் ஆயுதம் ஏந்தாமல் விடுதலை பெற்றது கிடையாது.

உத்தமர் காந்தி- இந்தியாவுக்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்தார். அவரை மதிக்கிறோம்.

உத்தமர் காந்தி பிறந்த மண்ணில்தானே பகத்சிங்கும் நேதாஜியும் பிறந்தார்கள்?

தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா 1964 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் நாள் நீதிமன்றிலே நிறுத்தப்பட்ட போது அவர் மீதும் "ஆயுதம் ஏந்திப் போராட" திட்டமிட்டதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது நெல்சன் மண்டேலா கூறினார், நாங்கள் வன்முறையின் மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எங்களை அழிக்க அரசு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது. அதனைத் தடுக்க நாங்கள் ஆயுதம் ஏந்துகிறோம்" என்றார். அதனையேதான் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூறுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமாக தீர்வு என்கிறார் மகிந்த ராஜபக்சே.

இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் என்ன சொன்னார்? கூட்டாட்சி என்பது இல்லை- ஒற்றையாட்சியின் மூலமே தீர்வு என்றார். தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரித்தார்.

தமிழர் தாயகக் கோட்பாட்டையே நிராகரிக்கிறவரிடமா அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியும்?

50களிலும் 60களிலும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசி ஒப்பந்தங்கள் போடப்பட்டனவே.... அதிகாரப் பகிர்வு என்று அறிவிப்பது ஏமாற்று வேலை.

1987ல் போரில் தோல்வியடைந்து சிங்களவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு ஓடுகிற நேரத்தில்- தமிழீழம் கண்ணுக்கெதிரே தெரிகின்ற நேரத்தில் ஜெயவர்த்தனே, இந்தியாவை ஒப்பந்தத்துக்கு அழைத்தார்.

அப்போதைய இந்திய அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலில் இந்தியப் பிரதமரும் ஒப்புக் கொண்டார்.

ஒப்பந்தம் எது என்று சொல்லாமலே ஏகப் பிரதிநிதியாக ஏற்கிறோம் என்று கூறி பிரபாகரனை டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலிலே கொண்டுபோய் வைத்தனர். அப்போது சொன்னார்கள்- ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேதானே ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும்? மத்தியஸ்தம் செய்யப் போன இந்தியா ஏன் போட்டு திணித்தது?

1987ம் ஆண்டு திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் பல சரத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாக இருந்தாலும் வடக்கு-கிழக்கு என்பது அடிப்படையில் ஒன்றுதான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னர் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாள் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் நான் கொண்டு வந்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய இந்திரா காந்தி அம்மையாரும் வடக்கு-கிழக்கு ஒன்று என்றுதான் கூறினார்.

அதுதான் இந்திய நாடாளுமன்றில் அவர் பேசிய கடைசிப் பேச்சும் கூட. ஆனால் இப்போது என்ன நடக்கிறது?

கிழக்கைப் பிரித்துவிட்டு- வடக்கோடு கிழக்கு இணைந்திருக்கவில்லை என்பதுபோல் காட்டிவிட்டு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவது போல் தேர்தல் நடத்துகிறார்களாம்.

காக்கை வன்னியன் காலம் முதல் கருணா காலம் வரை துரோகக் குழுவின் பட்டியல் இல்லாமல் போகாதா?

மாதம் ஒரு கோடி ரூபாயும் ஆயுதங்களும் பாதுகாப்பும் கொடுத்து கிழக்கில் மோசடித் தேர்தலை துப்பாக்கி முனையில் நடத்துகிறார்கள்.

வரதராஜப் பெருமாள் என்கிற பொம்மை நபரை வைத்து தேர்தல் நடத்தினிரீகளே? வாக்குச் சாவடியில் 8 பேர் கூட வாக்களிக்கவில்லையே?

இப்போது சிங்களவரைக் கொண்டு வழக்குப் போட்டு வடக்கையும் கிழக்கையும் பிரித்து தேர்தலை நடத்துகிறீர்கள். இதனைக் கண்டிக்க வேண்டாமா? உலகில் எந்த நாடும் கண்டிக்கவில்லை.

தொடுவானத்தைத் தொட்டு விடலாம் என்பது எப்படி கானல் நீரோ அதுபோல் அதிகாரப் பகிர்வு என்பதும் கானல் நீர். வேறு என்னதான் தீர்வு? தமிழீழம்தான் தீர்வு.

இஸ்ரேல் வென்றெடுக்கப்பட புலம்பெயர் உறவுகள் ஒத்துழைத்தது போல... தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் வழங்க வேண்டும் என்றார் வைகோ.

வைகோவின் பேச்சை பெரும் திரளான ஈழத் தமிழர்கள் திரண்டு வந்து கேட்டனர்.

தனது நார்வே பயணத்தை முடித்துக் கொண்டு வைகோ இன்று சென்னை வந்து சேர்ந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X